CRIME
“வேறு அம்மா கொண்டு வருகிறேன்..” 2 பிஞ்சுக் குழந்தைகளின் கண்முன்னே மனைவியை துடிதுடிக்க கொன்ற ரயில்வே ஊழியர்.. குலை நடுங்க வைக்கும் பின்னணி..!!
பீகார் மாநிலம் முங்கேர் மாவட்டத்தில் உள்ள ஜமால்பூரில், ரயில்வே லோகோ பைலட்டாகப் பணியாற்றி வந்த தர்ஷன் மண்டல் என்பவர் தனது மனைவி பூஜாவை கத்தியால் கழுத்தை அறுத்துக் கொடூரமாகப் படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பூஜாவின் குடும்பத்தினர் தங்களால் இயன்ற வரதட்சணையைக் கொடுத்த போதிலும், மேலும் வரதட்சணை கேட்டு தர்ஷன் மண்டல் தனது மனைவியை அடிக்கடி அடித்துத் துன்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த நவம்பர் 12-ஆம் தேதி புதன்கிழமை இரவு இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு முற்றியதில், ஆத்திரமடைந்த தர்ஷன் மண்டல் தனது 5 மற்றும் 8 வயது மகள்களின் கண்முன்னே மனைவி பூஜாவின் கழுத்தைக் கத்தியால் அறுத்துக் கொலை செய்துள்ளார்.
இந்தச் சம்பவத்தில் அனைவரையும் கண்கலங்க வைத்த விஷயம் என்னவென்றால், தாயை இழந்த அந்த இரண்டு பிஞ்சுக் குழந்தைகளும் அழுதுகொண்டே நடந்ததை விவரித்த விதம்தான். அம்மாவுக்கும் அப்பாவுக்கும் சண்டை நடந்தபோது அப்பா கத்தியால் அம்மாவை வெட்டிவிட்டதாகவும், இரத்த வெள்ளத்தில் துடித்த அம்மாவைக் காப்பாற்ற அக்கம்பக்கத்தினரை அழைக்கச் சென்ற தங்களை அப்பா வெளியே விடாமல் தடுத்து நிறுத்தியதாகவும் குழந்தைகள் கூறியுள்ளன. மேலும், “நான் உங்களுக்கு வேறு அம்மாவைக் கொண்டு வருகிறேன்” என்று தந்தை கூறியதாகவும், ஆனால் “எங்கள் அம்மாவின் இடத்தை வேறு யாராலும் நிரப்ப முடியாது” என்று அந்தக் குழந்தைகள் கதறி அழுததும் கேட்போரின் நெஞ்சை உலுக்குவதாக அமைந்துள்ளது.
திருமணமான நாளிலிருந்தே வரதட்சணைக் கொடுமையால் தனது சகோதரி துன்புறுத்தப்பட்டு வந்ததாக உயிரிழந்த பூஜாவின் சகோதரர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் BNS 103-வது பிரிவின் கீழ் கொலை வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், குற்றவாளி தர்ஷன் மண்டலைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். வரதட்சணை மற்றும் குடும்ப வன்முறைக்கு இன்னும் எத்தனை பெண்கள் தங்கள் உயிரை விலையாகக் கொடுக்க வேண்டும் என்ற கேள்வியையும், தாயை இழந்து தவிக்கும் இரண்டு பெண் குழந்தைகளின் எதிர்காலம் குறித்த கவலையையும் இச்சம்பவம் எழுப்பியுள்ளது.
