CRIME
நகைக்கடை உரிமையாளர்களே உஷார்.. வாடிக்கையாளர் போல வந்து 2.5 பவுன் தாலிச் சங்கிலியை அபேஸ் செய்த மர்மப் பெண்.. ஷாக்கிங் சிசிடிவி வீடியோ..!!
ரங்காரெட்டி மாவட்டம் ஷாத்நகரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா நகைக்கடையில், வாடிக்கையாளர் போல நடித்து வந்த பெண் ஒருவர் நூதன முறையில் தங்கத் தாலிச் சங்கிலியைத் திருடிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதிய உணவு நேரத்தில் கடையில் ஊழியர்கள் குறைவாக இருப்பதை நோட்டமிட்ட அந்தப் பெண், நகை வாங்குவது போல் கடைக்குள் நுழைந்துள்ளார். ஊழியர்களின் கவனத்தைத் திசைதிருப்பிய அவர், கண்ணிமைக்கும் நேரத்தில் சுமார் இரண்டரை பவுன் எடையுள்ள தங்கத் தாலிச் சங்கிலியைத் தனது கைவரிசையால் அபேஸ் செய்து அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
சிறிது நேரத்திற்குப் பிறகு நகை குறைவதை அறிந்த கடையின் உரிமையாளர், கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது அந்தப் பெண்ணின் கைவரிசைத் திருட்டுத் தெளிவாகப் பதிவாகியிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து, கடையின் உரிமையாளர் சிசிடிவி ஆதாரங்களுடன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், சிசிடிவி காட்சிகளைக் கொண்டு அந்த மர்மப் பெண்ணைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
