CRIME
“என் அம்மாவை வீட்டுக்குள் புகுந்து அடித்தார்கள்..!” குழந்தைகள் கண்முன்னே கள்ளகாதலனின் மனைவி செய்த காரியத்தால் 27 வயது பெண் எடுத்த விபரீத முடிவு.. 5 வயது சிறுமியின் அதிர்ச்சி வாக்குமூலம்..!!
கிருஷ்ணகிரி மாவட்டம் இளவம்பாடியைச் சேர்ந்த கீதா (27) என்பவருக்கும், திருப்பத்தூர் மாவட்டம் சிம்மணபுதூர் சின்ன வட்டம் பகுதியைச் சேர்ந்த ரவிசங்கருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணமான 3 மாதங்களில் ரவிசங்கருக்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் இருப்பது தெரியவந்த நிலையிலும், கீதா அவருடன் வாழ்ந்து வந்தார்; இத்தம்பதிக்கு 5 வயதில் மகளும், 4 வயதில் மகனும் உள்ளனர். ரவிசங்கர் கோயம்புத்தூரில் பணியாற்றி வந்ததால், கீதா குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில், ரவிசங்கரின் உறவினரான ராஜூவ்குமார் என்பவருடன் கீதாவுக்கு ஏற்பட்ட பழக்கம் திருமணத்திற்கு மீறிய உறவாக மாறியதாகவும், இது குறித்து அறிந்த ரவிசங்கர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திருப்பத்தூர் கிராமிய காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையில், இந்த விவகாரம் ராஜூவ்குமாரின் மனைவி மற்றும் தாய்க்குத் தெரியவந்ததால், ஆத்திரமடைந்த அவர்கள் கீதாவின் வீட்டிற்குள் புகுந்து குழந்தைகளின் கண்முன்னே கீதாவைத் தாக்கி மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் கடும் மன உளைச்சலில் இருந்த கீதா, நேற்று வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகத் தகவல் வெளியானது. சம்பவ இடத்திற்கு வந்த திருப்பத்தூர் கிராமிய போலீசார், கீதாவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காகத் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருமணமாகி 6 ஆண்டுகளே ஆவதால், பொறுப்பு வருவாய் கோட்டாட்சியர் தணிகாசலம் மருத்துவமனைக்குச் சென்று விசாரணை மேற்கொண்டார்.
விசாரணை முடிந்து வெளியே வந்த கோட்டாட்சியரின் வாகனத்தை மறித்துக் கதறி அழுத கீதாவின் பெற்றோர், தங்களது மகள் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றும், ராஜூவ்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் கீதாவை அடித்துக் கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டுள்ளதாகவும் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்தனர். மேலும், கீதாவின் 5 வயது மகளும், தனது தாயை வீட்டிற்குள் புகுந்து ராஜூவ்குமார் குடும்பத்தினர் தாக்கியதாகவும், செல்போனைப் பறித்துச் சென்றதாகவும் கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
