LATEST NEWS
மரணத்தை முன்கூட்டியே கணித்த AI.. பின்னால் எமனைப் போல வந்த கார்! கடைசி நொடியில் டெஸ்லா எடுத்த அதிரடி முடிவு… நூலிழையில் தப்பிய உயிர்..!!!
அமெரிக்காவின் உட்டா மாகாணத்தில் டெஸ்லா கார் ஒன்று பெரும் விபத்திலிருந்து நூலிழையில் தப்பிய டேஷ்கேம் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சாலையில் சென்று கொண்டிருந்த டெஸ்லா கார், திடீரெனத் தனது பாதையை மாற்றிச் சாலையின் ஓரத்திற்குச் சென்ற சில நொடிகளிலேயே, பின்னால் அதிவேகமாக வந்த ஒரு வெள்ளை நிறக் கார் டெஸ்லாவைக் கடந்து சென்று முன்னால் இருந்த மற்றொரு வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியது. இந்தக் கோர விபத்தில் அதிவேகமாகக் காரை ஓட்டி வந்த நபர் உயிரிழந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சம்பவத்தின் வீடியோக்களை ‘எக்ஸ்’ தளத்தில் பகிர்ந்த கேத்லீன் ஆண்டர்சன் என்பவர், விபத்து நடந்தபோது தனது சகோதரரின் நண்பருக்குச் சொந்தமான அந்த டெஸ்லா கார் ‘ஃபுல் செல்ஃப்-டிரைவிங்’ தொழில்நுட்பத்தில் இயங்கிக் கொண்டிருந்ததாகத் தெரிவித்துள்ளார். பின்னால் எமனைப் போல அதிவேகமாக வந்த காரின் ஆபத்தை டெஸ்லாவின் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் முன்கூட்டியே கணித்து, தானாகவே விலகி வழிவிட்டதால் உள்ளே இருந்தவரின் உயிர் காப்பாற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த வீடியோ இணையத்தில் வெளியானதைத் தொடர்ந்து, தானியங்கி ஓட்டுநர் தொழில்நுட்பத்தின் (Self-driving technology) பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மை குறித்துப் பெரிய விவாதமே எழுந்துள்ளது. ஒரு மனித ஓட்டுநரால் இவ்வளவு குறுகிய நேரத்தில் பின்னால் வரும் ஆபத்தை உணர்ந்து விலகியிருக்க முடியாது எனப் பலரும் டெஸ்லாவின் தொழில்நுட்பத்தைப் பாராட்டி வருகின்றனர். அதேசமயம், இந்தச் செயல்பாடு உண்மையிலேயே டெஸ்லாவின் ஏஐ (AI) தொழில்நுட்பத்தால் நடந்ததா என்பது குறித்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ அமைப்பும் உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
