CRIME
“கிரைம் த்ரில்லர் படத்தையே மிஞ்சிய பயங்கரம்..” கணவன் பாக்கெட்டில் 8 காலி மாத்திரை அட்டைகள்… காதலனுடன் சேர்ந்து மனைவி ஆடிய பகீர் நாடகம்.. போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் வெளிவந்த பகீர் உண்மை!
கான்பூரில் நடைபெற்ற இந்தச் சம்பவம் எந்தவொரு த்ரில்லர் திரைப்படத்திற்கும் சற்றும் குறைவில்லாத உண்மைக் கதையாகும். ஆபித் என்பவரைத் திருமணம் செய்திருந்த ஷபானாவிற்கு, சமூக வலைதளம் மூலமாக ரெஹான் என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டு அது நாளடைவில் திருமணத்திற்கு மீறிய உறவாக மாறியது. இரவில் ஆபித் தூங்கிய பிறகு ரெஹான் வீட்டிற்கு வந்து செல்லுமளவிற்கு இவர்களது நெருக்கம் அதிகரித்தது. ஒருகட்டத்தில் இந்த ரகசிய உறவு குறித்து ஆபித்திற்குத் தெரியவரவே வீட்டில் தினமும் தகராறுகள் வெடித்தன. தங்களது உறவுக்கு இடையூறாக இருக்கும் கணவனை நிரந்தரமாக வழியிலிருந்து அகற்ற ஷபானா திட்டமிட்டார்.
இந்நிலையில், ஒருநாள் இரவு ஆபித் மர்மமான முறையில் உயிரிழந்தார். மறுநாள் காலை ஒன்றும் அறியாதவர் போலக் கதறி அழுத ஷபானா, சக்தி ஊட்டும் மாத்திரைகளை அதிகளவில் உட்கொண்டதால்தான் தன் கணவர் உயிரிழந்ததாகக் காவல்துறையினரிடமும் உறவினர்களிடமும் நாடகமாடினார். ஆபித்தின் சட்டைப் பையில் கிடந்த 8 காலி மாத்திரை உறைகளும் ஷபானாவின் கதையை உறுதிப்படுத்துவது போலவே இருந்தன. இதனால் காவல்துறையினரும் இதனை இயற்கை மரணம் எனக் கருதி, உடற்கூராய்விற்குப் பிறகு உடலை அடக்கம் செய்ய அனுமதித்தனர்.
ஆனால், மறுநாள் வெளியான உடற்கூராய்வு அறிக்கை வழக்கின் போக்கையே தலைகீழாக மாற்றியது. ஆபித் மாத்திரைகளால் உயிரிழக்கவில்லை என்றும், அவர் கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்றும் அந்த அறிக்கையில் தெரியவந்தது. இதற்கிடையில் ஷபானாவின் சகோதரர் சலீமும் தன் தங்கை மீது சந்தேகம் தெரிவித்த நிலையில், ஷபானாவின் செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்த காவல்துறையினர் ரெஹானைப் பிடித்து விசாரித்தனர். விசாரணையில், சம்பவத்தன்று இரவு ரெஹான் தனது நண்பருடன் வீட்டிற்கு வந்து ஆபித்தைக் கழுத்து நெரித்துக் கொலை செய்ததும், அதனை மறைக்க ஷபானா மாத்திரை நாடகத்தை அரங்கேற்றியதும் அம்பலமானது.
