CRIME
“அவ என்னோட கள்ளக்காதலி” திருப்பத்தூரில் பட்டப்பகலில் அரங்கேறிய இரட்டைக் கொ**யில் திடீர் திருப்பம்.. 8 மணி நேரத்தில் சிக்கிய கொலையாளியின் பகீர் வாக்குமூலம்…!
திருப்பத்தூர் மாவட்டம் தோரணம்பதி அடுத்த வெங்கடேஸ்வரா நகர் பகுதியில் விற்பனைக்காகப் போடப்பட்டுள்ள காலி வீட்டு மனைகளுக்கு, கடந்த வெள்ளிக்கிழமை (நவம்பர் 20, 2026) மதியம் சுமார் 1:30 மணியளவில் காரில் வந்த ஆண் மற்றும் பெண் இருவர் மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர். சம்பவ இடத்திலேயே இருவரும் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த நிலையில், தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் உடல்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்டவர் திருவண்ணாமலை மாவட்டம் பாச்சல் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலையின் மகன் ரஞ்சித்குமார் (வயது 30) என்பதும், அவருடன் இருந்த பெண் திருப்பத்தூர் மாவட்டம் ப.முத்தம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சிரஞ்சீவியின் மனைவி மாலினி (வயது 30) என்பதும் அடையாளம் காணப்பட்டது. பட்டப்பகலில் நடந்த இந்த இரட்டைக் கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
இந்தச் சம்பவம் தொடர்பாக திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அக்சய் அனில் வாகரே உத்தரவின் பேரில், டிஎஸ்பி முரளி மற்றும் ஆய்வாளர் ஜான் பிரிட்டோ தலைமையில் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகள் மற்றும் செல்போன் சிக்னல்களை ஆய்வு செய்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இதனிடையே, கொலைக்குப் பிறகு தப்பியோடிய சஞ்சீவ் காந்தி என்பவர் திருவண்ணாமலையில் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், சம்பவம் நடந்த 8 மணி நேரத்திற்குள் போலீசார் அவரைக் கைது செய்தனர். விசாரணையில், மாலினிக்கும் சஞ்சீவ் காந்திக்கும் பள்ளிப் பருவத்திலிருந்தே பழக்கம் இருந்து வந்ததும், அது நாளடைவில் திருமணத்தை மீறிய உறவாக மாறியதும் தெரிய வந்தது; மேலும் மாலினிக்கு ரஞ்சித்குமாருடனும் நெருக்கம் ஏற்பட்டிருந்த நிலையில், இருவரும் காரில் காலிமனைக்குச் சென்றதை அறிந்த ஆத்திரத்தில் சஞ்சீவ் காந்தி பின்தொடர்ந்து சென்று இருவரையும் வெட்டிக் கொலை செய்தது விசாரணையில் அம்பலமானது.
