CRIME
“எலும்பு முறிவு இல்லை..” மாவுக்கட்டுக்குப் பதிலாக அட்டைப் பெட்டி வைத்துக் கட்டிய அரசு மருத்துவமனை.. இரவு முழுவதும் வலியால் துடித்த வியாபாரி.. தனியார் மருத்துவமனையில் காத்திருந்த பேரதிர்ச்சி..!!
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் காய்கறி வியாபாரம் செய்து வருபவர் தர்மபாபு குப்தா. இவர் சமீபத்தில் நடந்த சாலை விபத்து ஒன்றில் சிக்கியதில், இவரது கையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, தகுந்த சிகிச்சை பெறுவதற்காக அவர் அப்பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்குச் சென்றார். ஆனால், அங்கு பணியில் இருந்த மருத்துவர்கள் இவரது கையை முறையாகப் பரிசோதிக்கவோ, எக்ஸ்-ரே எடுக்கவோ அல்லது மாவுக்கட்டு போடவோ இல்லை என தர்மபாபு குற்றம் சாட்டியுள்ளார்.
மாறாக, மருத்துவமனை ஊழியர்கள் இவரது காயமடைந்த கையில் சாதாரண அட்டைப் பெட்டியை வைத்து அதன் மீது பேண்டேஜ் துணியைச் சுற்றிக் கட்டியுள்ளனர். மேலும், “உங்கள் கையில் எலும்பு முறிவு எதுவும் ஏற்படவில்லை” என்று கூறி அவரை வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். அரசு மருத்துவமனையின் இந்த அலட்சியமான செயல் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வீட்டிற்குத் திரும்பிய தர்மபாபுவிற்கு நேரம் செல்லச் செல்லக் கையில் வலியும் வீக்கமும் அதிகரிக்கத் தொடங்கியது. இரவு முழுவதும் கடுமையான வலியால் துடித்த அவர், மறுநாள் உடனடியாக ஒரு தனியார் மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்தார். அங்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில், அவரது கையில் இரண்டு இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பது உறுதியானது. அரசு மருத்துவமனையின் இந்த அலட்சியப் போக்கு குறித்து சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
