LATEST NEWS
எத்தனை பொய்கள்..? எவ்வளவு உருட்டுகள்..? இது பச்சை அயோக்கியத்தனம் இல்லையா.? கள்ளக்குறிச்சி ஆட்சியர் புகாரால் சிக்கிய தவெக அரசு – இபிஎஸ் சரமாரி கேள்வி..!!
கள்ளக்குறிச்சி மாவட்டப் பெண் ஆட்சியருக்குத் தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்த விவகாரத்தில், ஆட்சியர் தற்போது நேரடியாகக் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளதைத் தொடர்ந்து, தவெக அரசையும் முதல்வர் விஜய்யையும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஒரு மாவட்டத்தின் நிர்வாகத் தலைவரான பெண் ஆட்சியருக்கே இழைக்கப்பட்ட இந்தப் பெரும் கொடுமையை மறைக்க அரசுத் தரப்பு எத்தனை பொய்களையும், உருட்டுகளையும் கட்டவிழ்த்துவிட்டது என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். உயர்நீதிமன்றத்திலேயே அரசு தரப்பில் புகார் வரவில்லை என மறுக்கப்பட்டதாகவும், தலைமைச் செயலகத்திலேயே அமைச்சர் மறுத்துப் பேட்டி அளித்ததாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், கூட்டணி கட்சியான காங்கிரஸின் மாநிலத் தலைவரும் “எம்எல்ஏ பாவம்” என ஆதரவாகப் பேசிய நிலையில், வெளியில் தெரிந்தே இத்தனை அழுத்தங்கள் வந்தபோதிலும், அவற்றையெல்லாம் மீறி மாவட்ட ஆட்சியர் திடமாக நின்று புகார் அளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஒரு பெண் ஆட்சியருக்கே பணிச்சூழலில் பாதுகாப்பு இல்லாத நிலை இருப்பது பச்சை அயோக்கியத்தனம் இல்லையா என எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் சாடியுள்ளார்.
