LATEST NEWS
“தமிழகத்தை வஞ்சிக்கும் கர்நாடக காங்கிரஸ்… கூட்டணி பாசத்திற்காக கண்மூடி வேடிக்கை பார்க்கிறாரா முதல்வர்…?” நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம்..!!
ஆணவத்தில் ஆடும் கர்நாடக காங்கிரஸ், அரியணைக்காக அடங்கி போகும் தமிழக முதல்-அமைச்சர் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். இது தொடர்பாக, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது:- தமிழகத்தின் நீராதாரத்தை பாதுகாக்கவும், வெள்ள உபரி நீர் கடலில் கலந்து வீணாகாமல் தடுத்து, வறட்சியான பகுதிகளுக்கு பயன்படுத்தவும் முன்மொழியப்பட்ட காவிரி – வைகை – குண்டாறு நதிகள் இணைப்பு திட்டம், சரபங்கா திட்டம், புது கட்டளை நீர்ப்பாசன திட்டம், கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டுமென உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ள கர்நாடக காங்கிரஸ் அரசை வன்மையாக கண்டிக்கிறேன்.
காவிரி, கச்சத்தீவு, இலங்கை தமிழர் படுகொலை, முல்லை பெரியாறு, மேகதாது அணை என தமிழகத்திற்கு வெறும் துரோகங்களை மட்டுமே பரிசளித்து வந்த காங்கிரஸுக்கு, தமிழர்கள் மீதுள்ள வெறுப்பும் காழ்ப்புணர்வும் இன்னும் அடங்கவில்லை போல. அதனால் தான், தமிழகத்தின் நீராதாரத்தை நிறுத்தி, குடிநீருக்கே கையேந்தும் அவல நிலைக்கு தமிழக மக்களை தள்ள பார்க்கிறார்கள்.
தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய உரிமை நீரை பறிக்கும் மேகதாது அணை திட்டத்தை போலல்லாமல், வீணாக கடலில் கலக்கும் உபரி நீரை கொண்டு தமிழக விவசாயிகளுக்கு பயன்படும் வகையிலான நதிநீர் திட்டங்களை தமிழக அரசு கொண்டு வருவதால், கர்நாடக காங்கிரஸுக்கு என்ன பிரச்சினை? காவிரி நீர் மேலாண்மை ஆணையம் பலமுறை உத்தரவிட்டாலும் கூட, தமிழகத்திற்கு தரவேண்டிய காவிரி நீரை சரியான நேரத்திற்கு திறந்து விடாமல் குறுவை பயிர்களையும், சம்பா விளைச்சலையும் கெடுத்து, விவசாயிகளை நிலைகுலைய வைத்த கர்நாடக காங்கிரஸ் அரசு, தற்போது தமிழக அரசின் கொள்கை முடிவுகளிலும் தலையிட ஆரம்பித்துவிட்டதா? கூட்டணி பாசம் கருதி முதல்-அமைச்சர் விஜய் அதை வேடிக்கை பார்க்கிறாரா? இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
