DISTRICT NEWS
“பாக்ஜலசந்தியில் தொடரும் கடல் சீற்றம்”.. சேதமடையும் பவளப்பாறைகள், செயற்கைப்பாறை அமைக்க மீனவர்கள் கோரிக்கை…!!
ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தி கடல் பகுதிகளில் இயற்கையாகவே பல்வேறு அரியவகை பவளப்பாறைகள் அமைந்துள்ளன. சுனாமி போன்ற பேரலைகளைக் கட்டுப்படுத்துவதிலும், மீன்களின் வாழிடம் மற்றும் இனப்பெருக்கத்திற்கும் இவை முக்கியப் பங்காற்றுகின்றன. வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் கடந்த சில வாரங்களாகப் பாக்ஜலசந்தி கடல் பகுதியில் கடல் சீற்றம் நிலவி வருகிறது.
கடல் சீற்றம் மற்றும் நீரோட்டத்தின் காரணமாகப் பல அரியவகை பவளப்பாறைகள் உடைந்து சேதமடைந்து, உச்சிப்புளி அருகே அரியமான் கடற்கரை முதல் பிரப்பன்வலசை வரையிலான கடற்கரைப் பகுதிகளில் கரை ஒதுங்கி வருகின்றன. மலை வடிவம், குச்சி வடிவம் மற்றும் மூளை வடிவம் எனப் பல்வேறு வகைகளைச் சேர்ந்த பவளப்பாறைகள் இவ்வாறு உடைந்து கிடப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாக்ஜலசந்தி பகுதியில் பவளப்பாறைகள் தொடர்ந்து சேதமடைவதால் மீன்கள் இனப்பெருக்கத்திற்குப் பாதிப்பு ஏற்படக்கூடும் எனக் கூறப்படுகிறது. எனவே, பவளப்பாறைகளைப் பாதுகாக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மீன்கள் இனப்பெருக்கத்திற்கு ஏற்ற வகையில் பல்வேறு இடங்களில் செயற்கை பவளப்பாறைக் கற்களை அமைக்க வேண்டும் என்றும் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
