LATEST NEWS
முதல்வர் விஜய்க்கு அடுத்த தலைவலி.. அமைச்சர் ஸ்ரீநாத்துடன் ஒரே மேடையில் ‘வாண்டட் லிஸ்ட்’ கிரிமினல்.. யார் இவர்..? தமிழக அரசியலில் வெடித்த புதிய சர்ச்சை..!!
சென்னையில் நடைபெற்ற வ.உ.சிதம்பரனார் நினைவு தின விழாவில், அமைச்சர் ஸ்ரீநாத் கலந்துகொண்ட மேடையில் காவல்துறையினரால் தேடப்பட்டு வரும் நபர் ஒருவரும் பங்கேற்றிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடியைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழக நிர்வாகியான திருச்சிற்றம்பலம் என்பவர், சட்டவிரோதமாகச் சூதாட்ட விடுதி நடத்திய புகாரில் சிக்கியுள்ளார். இது தொடர்பாக அவர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில், அவர் தலைமறைவாக இருந்து வருவதாகவும், போலீசாரால் தீவிரமாகத் தேடப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இவ்வாறு காவல்துறையின் தேடுதல் பட்டியலில் உள்ள ஒருவர், எந்தவித அச்சமுமின்றி சென்னையில் நடைபெற்ற அரசு மற்றும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த நினைவு தின விழாவில் அமைச்சருடன் பங்கேற்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. போலீசாரால் தேடப்படும் நபர் அமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சியில் எப்படிச் சர்வ சாதாரணமாகக் கலந்துகொள்ள முடிந்தது என இணையவாசிகளும் எதிர்க்கட்சியினரும் கேள்வி எழுப்பி வருவதால், இந்த விவகாரம் இணையத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
