CRIME
“இதுவே எங்கள் கடைசி வீடியோவாக இருக்கலாம்..” உக்ரைன் போர் முனையில் சிக்கிய ஆந்திர இளைஞர்கள்.. நடந்தது என்ன..? பிரதமருக்கு கண்ணீர் கோரிக்கை..!!
விசாகப்பட்டினம் துவ்வாடா பகுதியைச் சேர்ந்த 19 வயதான ஜே. வம்சி என்ற இளைஞர், உணவுப் பொட்டலம் கட்டும் வேலைக்காக ரஷ்யாவிற்குச் சென்றார். அங்குச் சென்ற பிறகு தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர், நேபாளி நபர் ஒருவரின் மூலம் ரஷ்ய ராணுவத்திற்கு உணவுப் பொட்டலம் கட்டும் வேலை கிடைப்பதாக நம்பினார். அவரும், ஆந்திராவைச் சேர்ந்த மற்ற நான்கு இளைஞர்களும் ரஷ்ய மொழியில் இருந்த ஆவணங்களில் அர்த்தம் புரியாமல் கையெழுத்திட்டனர். இதன் மூலம் அவர்கள் ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். நாடு திரும்ப வேண்டும் என்று அவர்கள் கேட்டபோது, அவர்கள் ரஷ்யக் குடியுரிமையை ஏற்றுக்கொண்டு விட்டதாகவும், இனி அவர்கள் இந்தியர்கள் இல்லை என்றும் அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது உக்ரைன் எல்லையில் ரஷ்ய ராணுவ உடையில் இருக்கும் வம்சியும் அவரது நண்பர் சதீஷும், தங்களை மீட்கக் கோரி பிரதமர் மற்றும் ஆந்திரப் பிரதேச அரசிற்கு உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். தங்களோடு வந்த மூவர் ஏற்கனவே போர் முனைக்கு அனுப்பப்பட்டு மாயமாகியுள்ள நிலையில், தங்களுக்கு இதுவே கடைசிச் செய்தியாக இருக்கலாம் என்றும் வம்சி அச்சம் தெரிவித்துள்ளார். “எனக்கு யாரும் இல்லை, மகனை மீட்டுத் தாருங்கள்” என வம்சியின் விதவைத் தாய் அப்பல கொண்டா கண்ணீர் மல்கக் கோரிக்கை விடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து, அந்த இளைஞர்களைப் பாதுகாப்பாகத் தாயகம் அழைத்து வர உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ் தனது அலுவலகத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.
