LATEST NEWS
“என் எஜமான் வருவான்…” 8 வருடங்களாக மருத்துவமனை வாயிலில் உயிராய் காத்திருக்கும் விசுவாசமான சேவல்..! கண்கள் கலங்க வைக்கும் சம்பவம்..!!
நாய் போன்ற விலங்குகளின் விசுவாசத்தைப் பற்றி நீங்கள் பல கதைகளைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஜப்பானைச் சேர்ந்த ‘ஹாச்சிகோ’ நாயின் கதை இன்றும் கூட பலரின் கண்களைக் குளமாக்கக்கூடியது. ஆனால், ஒரு விலங்கு அல்லது பறவை அதுவும் ஒரு சேவல் தனது எஜமானருக்காக இப்படி காத்திருப்பதை எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா? பொலிவியா நாட்டைச் சேர்ந்த ஒரு சேவல் கடந்த 8 ஆண்டுகளாக மருத்துவமனைக்கு வெளியே தனது எஜமானருக்காகக் காத்திருக்கிறது. இந்த பறவையின் விசுவாசத்தைக் கண்டு ஒட்டுமொத்த உலகமும் வியந்து போய் நிற்கிறது.
மெக்சிகோவின் ‘ADN Noticias’ செய்தி சேனலின் தகவலின்படி, பொலிவியாவில் உள்ள சாண்டா க்ரூஸ் பகுதியில் அமைந்துள்ள ஒரு புற்றுநோய் மருத்துவமனைக்கு வெளியே இந்த சேவல் கடந்த 8 ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறது. ‘மார்ட்டின்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த சேவலின் எஜமானர், பல ஆண்டுகளுக்கு முன்பு புற்றுநோய் சிகிச்சைக்காக இந்த மருத்துவமனைக்கு வந்துள்ளார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துவிட்டார். அன்று முதல், மார்ட்டின் மருத்துவமனைக்கு வெளியே உள்ள மரங்களிலும், திறந்த மைதானத்திலும் சுற்றித்திரிந்து தன் எஜமானரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
ஜப்பானின் புகழ்பெற்ற ‘ஹாச்சிகோ’ நாயுடன் பலரும் இந்தக் கதையை ஒப்பிட்டுப் பேசுகின்றனர். எஜமானரின் இறப்புக்குப் பிறகும் அந்த நாய் தினமும் இரயில் நிலையத்திற்கு வந்து காத்திருந்தது போல இதுவும் உள்ளது. இவ்வளவு நீண்ட காலமாக அங்கேயே வாழ்ந்து வருவதால், மார்ட்டின் இப்போது மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் அப்பகுதி கடைக்காரர்களின் குடும்பத்தில் ஒருவரைப் போல் மாறிவிட்டது. அங்கு வருபவர்கள் அனைவரும் இதற்குத் தினமும் உணவளித்து கவனித்துக் கொள்கிறார்கள். குறிப்பாக இதற்கு பாப்கார்ன் மிகவும் பிடிக்கும் என்பதால், மக்கள் அன்போடு இதனை ‘பிபோகா’ என்றும் அழைக்கிறார்கள். விசுவாசம் என்பது மனிதர்களுக்கும் நாய்களுக்கும் மட்டுமே சொந்தமானதல்ல என்பதை மார்ட்டின் தன் வாழ்வின் மூலம் நிரூபித்துக் காட்டியுள்ளது.
