Uncategorized
ரூ.11,737 கோடி மெகா ப்ராஜெக்ட்!.. திருமண விழாவில் முதல்வர் விஜய்யை சந்தித்த அதானி.. உள்ளே நடந்த ரகசிய டீல் என்ன..?
தூத்துக்குடி துறைமுகத்தில் சுமார் ரூ.11,737 கோடி மதிப்பீட்டில் வெளித்துறைமுக உள்கட்டமைப்பை மேம்படுத்தும் பிரம்மாண்ட திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. சர்வதேச கடல் வணிகத்தை விரிவுபடுத்துவதுடன் சரக்குக் கையாளும் திறனை அதிகரிப்பதை இலக்காகக் கொண்ட இத்திட்டத்தில், அலை தடுப்புச் சுவர்கள் அமைத்தல் மற்றும் கடலைத் தூர்வாருதல் உள்ளிட்ட முக்கியப் பணிகள் அடங்கியுள்ளன. இந்த மெகா ஒப்பந்தத்தைக் கைப்பற்றுவதற்காக அதானி போர்ட்ஸ், விஸ்வா சமுத்திரா மற்றும் மேகா இன்ஜினியரிங் ஆகிய மூன்று முன்னணி நிறுவனங்களிடையே தீவிரப் போட்டி நிலவி வருகிறது.
இத்தகைய சூழலில், ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் இல்லத் திருமண விழாவில் தமிழக முதல்வர் விஜய்யும், தொழிலதிபர் கௌதம் அதானியும் கலந்து கொண்டுள்ளனர். இருவரையும் ஜெகன்மோகன் ரெட்டி உற்சாகமாக வரவேற்ற நிலையில், இந்த நிகழ்வின் போது மூவரும் முக்கிய விவகாரங்கள் குறித்துத் தனிப்பட்ட முறையில் ஆலோசனை நடத்தியதாக அரசியல் மற்றும் தொழில்துறை வட்டாரங்களில் தகவல்கள் கசிந்துள்ளன.
இந்தச் சந்திப்பின் போது, அதானி குழுமத்தின் தொழில் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு ஜெகன்மோகன் ரெட்டி வாயிலாக முதல்வர் விஜய்யிடம் கோரிக்கை வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, தூத்துக்குடி துறைமுகத் திட்டத்தைத் தங்களுக்குச் சாதகமாக்க உதவ முடியுமா என அதானி தரப்பில் கேட்கப்பட்டதற்கு, துறை சார்ந்த உயரதிகாரிகளுடன் ஆலோசித்த பிறகே இது குறித்து முடிவெடுக்க முடியும் என முதல்வர் விஜய் நிதானமாகப் பதிலளித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக்காலத்திலேயே தமிழகத்தில் கால்பதித்த அதானி குழுமம், தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோரது ஆட்சிக்காலங்களிலும் மின்சாரம் முதல் துறைமுகம் வரை பல்வேறு துறைகளில் தங்களது தொழிலை விரிவுபடுத்தியது. இதன் அடுத்தகட்டமாக, தூத்துக்குடி துறைமுகத் திட்டம் மட்டுமின்றி, சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய விமான நிலையங்களைத் தனியார்மயமாக்கும் திட்டங்களிலும் தங்களுக்கு முன்னுரிமை அளிக்குமாறு முதல்வர் விஜய்யிடம் அதானி தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
தமிழகத்தின் மிகப்பெரிய உள்கட்டமைப்புத் திட்டங்களைக் கைப்பற்ற அதானி குழுமம் தீவிரம் காட்டி வரும் நிலையில், முதல்வர் விஜய்யுடனான இந்தச் சந்திப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. தொழிலதிபர் அதானியின் இந்தத் தொழில் ரீதியான கோரிக்கைகளுக்கு முதல்வர் விஜய் எந்த அளவுக்குப் பச்சைக்கொடி காட்டுவார் என்பது அடுத்த ஒரு மாத காலத்திற்குள் தெரியவரும் எனத் தொழில்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.
