உங்கள் உருட்டுகளை தியேட்டர் வாசலோடு நிறுத்துங்கள்..! அமைச்சர் ஆனந்தின் ‘சர்கார்’ பேச்சுக்கு அதிமுக சுடச்சுட பதிலடி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

உங்கள் உருட்டுகளை தியேட்டர் வாசலோடு நிறுத்துங்கள்..! அமைச்சர் ஆனந்தின் ‘சர்கார்’ பேச்சுக்கு அதிமுக சுடச்சுட பதிலடி..!!

Published

on

தமிழ்நாடு சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் ஆனந்த், நடிகர் விஜய் நடித்த சர்கார் பட பேனரை கிழித்ததால்தான் அதிமுக ஆட்சியை இழந்தது என்று குறிப்பிட்டிருந்தார். இதற்கு கண்டனம் தெரிவித்து அதிமுக தரப்பில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், விபரீத யோகத்தில் ஆட்சிக்கு வந்துவிட்ட மாய மோகம் தலைக்கேறி, வாய்க்கு வந்ததை அதிமுக குறித்து சட்டமன்றத்தில் பேசியுள்ள அமைச்சர் ஆனந்துக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீர்வளத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில், அதைத் தவிர எல்லாவற்றையும் பேசிய அமைச்சர் புஸ்ஸி ஆனந்த், தேவையே இல்லாமல் அதிமுகவை சீண்டும் வகையில் பேசியுள்ளதாகவும், அதற்கான எதிர்வினையை அவர் எதிர்கொள்ள வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. சர்கார் திரைப்பட பேனர்களை கட்சித் தொண்டர்கள் கிழித்ததால் தான் அதிமுக ஆட்சி 2021-ல் அமையவில்லை என்று கூறியதற்கு, “அரசியல் புரிதலற்ற 107 அறிவிலிகள் அவையை ஆக்கிரமித்து இருப்பதால் இந்த அலங்கோலத்தைக் கேட்கும் நிலை தமிழ்நாட்டிற்கு ஏற்பட்டுள்ளது” என அதிமுக பதிலடி கொடுத்துள்ளது.

மேலும் அந்தப் பதிவில், உலகில் வாழும் தமிழர்கள் உள்ளமெல்லாம் வீற்றிருக்கும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் இயற்பெயரைப் பயன்படுத்தி, தவறான வகையில் அரசியல் ரீதியாக சித்தரித்து ஒரு படம் வந்தால், அவரின் வழிவந்த தொண்டர்கள் சும்மா இருக்க மாட்டார்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. எப்போதும் தங்களது தலைவர்களைப் பழித்துப் பேசுவோர் யாராக இருந்தாலும், இயக்கத்தின் தொண்டன் வீறுகொண்டு எழுவான் என்றும், அவனது அரசியல் எதிர்வினை எதிரிகளின் அரசியல் வாழ்க்கையையே முடித்துக் கட்டிவிடும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதே சர்கார் படத்தில் தூக்கி எறிவது போல காட்சி அமைத்த “அம்மா லேப்டாப்”களை இப்போது ஏன் வழங்குகிறீர்கள் என்றும், அன்று பழித்துப் பேசிய ஜெயலலிதாவின் பெயரையும் அவரின் மக்கள் நலத் திட்டங்களையும் இன்று அரசியல் லாபத்திற்காகப் பயன்படுத்துவதற்கு உங்களுக்கு கேவலமாக இல்லையா என்றும் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.

Advertisement

2021 சட்டமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை, 10 ஆண்டுகள் ஆட்சிக்கு பிறகு ஒரு மாற்றம் வேண்டும் என்ற தமிழ்நாடு மக்களின் சாதாரண எண்ணப்படிதான் வெற்றி வாய்ப்பு நழுவியதாகவும், அப்போதும் 33.3% வாக்குகளோடு 75 தொகுதிகளில் வென்று பிரதான எதிர்க்கட்சியாக பணியாற்றுவதாகவும் அதிமுக தெளிவுபடுத்தியுள்ளது. அதனால், “பேனரைக் கிழித்ததால் ஆட்சி கவிழ்ந்தது, ஒரு நடிகனைக் கண்டு அரசாங்கமே” என்றெல்லாம் உருட்டும் பழைய போக்கை தியேட்டர் வாசலோடும், ட்விட்டர் அணில் குஞ்சுகளோடும் நிறுத்திக் கொள்ளுமாறு அமைச்சருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இறுதியாக, “சர்கார் பட சர்ச்சையில் ஒரு விஷயத்திற்கு வேண்டுமானால் வருத்தப்படுகிறோம்; அந்த குப்பைப் படத்திற்கு எங்களால் ஒரு 2 நாட்கள் இலவச விளம்பரம் கிடைத்ததற்காக” என்றும் அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in