CRIME
“அடச்சீ நீயெல்லாம் மனுஷனா..?” மனைவியை கொன்றதோடு ஒன்றரை வயதுக் குழந்தையின் பாதத்தில்.. கொடூரமாக சித்திரவதை செய்த கொடூரன்.. கதி கலங்க வைக்கும் பின்னணி..!!
பீகார் மாநிலம் பூர்னியா மாவட்டத்தில், காதலித்துத் திருமணம் செய்து கொண்ட ரபினா என்ற இளம்பெண் வரதட்சணைக் கொடுமையால் கணவனால் படுகொலை செய்யப்பட்ட நெஞ்சை உலுக்கும் சம்பவம் அரங்கேறியுள்ளது. ஒரே கிராமத்தைச் சேர்ந்த ரபினாவும் விஷாலும் தீவிரமாகக் காதலித்து வந்த நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்காக ரபினா சனாதன தர்மத்தை ஏற்றுக்கொண்டு விஷாலுடன் வாழத் தொடங்கியுள்ளார். ஆரம்பத்தில் ஆறு மாதங்கள் மகிழ்ச்சியாகச் சென்ற நிலையில், ரபினா கர்ப்பமடைந்தபோது விஷால் அவரது குடும்பத்தினரிடம் இரண்டு லட்சம் ரூபாய் வரதட்சணை கேட்டு மிரட்டி, ரபினாவை அவரது பெற்றோர் வீட்டிற்கு அனுப்பியுள்ளார். ரபினாவின் குடும்பத்தினர் சிறுகச் சிறுகச் சேர்த்து அந்தப் பணத்தைக் கொடுத்த பிறகுதான் அவர் மீண்டும் கணவர் வீட்டிற்குச் சேர்க்கப்பட்டுள்ளார்.
தற்போது இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஒரு மகன் இருக்கும் நிலையிலும், விஷாலின் பணத்தாசை அடங்கவில்லை என ரபினாவின் குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர். தொடர்ந்து கூடுதல் பணம் கேட்டு வீட்டில் ரபினாவை விஷால் கொடூரமாக அடித்துத் துன்புறுத்தி வந்துள்ளார். இந்தத் தகராறு நாளுக்கு நாள் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த விஷால் ரபினாவைக் கழுத்தை நெரித்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு ரபினாவின் சடலம் அவரது பெற்றோரின் மண் குடிசை வீட்டிற்குத் கொண்டுவரப்பட்டது. வீட்டின் ஏழ்மை நிலை காரணமாகச் சடலத்திலிருந்து துர்நாற்றம் வீசாமல் இருக்க, வெறும் தரையில் உடலை வைத்து அருகில் பனிக்கட்டிகளை அடுக்கி வைத்து, தங்களுக்கு நீதி வேண்டும் என்று அவரது தாய் கதறிய அழுகுரல் ஒட்டுமொத்த கிராமத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்தக் கொடூரச் சம்பவத்தில் மற்றொரு நெஞ்சைப் பதறவைக்கும் உண்மையும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ரபினாவைக் கொலை செய்தது மட்டுமன்றி, விஷால் தனது ஒன்றரை வயதுப் பிஞ்சு மகனின் கால்களில் எரியும் சிகரெட்டை வைத்துக் கொடூரமாகச் சூடு வைத்துள்ளதாகக் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். குழந்தையின் பிஞ்சுப் பாதங்களில் இருக்கும் சிகரெட் சூட்டுத் தழும்புகள் கேமரா முன்னால் காட்டப்பட்ட போது பார்ப்போரை உறைந்துபோகச் செய்தது. எவ்விதப் பின்னணியும் இன்றி, பெற்றோரை எதிர்த்து விஷால் மீது வைத்த தூய்மையான காதல், இறுதியில் வரதட்சணைக் கொடுமையால் ரபினாவின் உயிரையே பறித்து மிகக் கொடூரமான முறையில் முடிவுக்கு வந்துள்ளது.
