CINEMA
ஹீரோயினாக களம் இறங்கிய தேவயானி மகள்..! அதுவும் இந்த டாப் ஹீரோ படத்தில்..?ரசிகர்களை வியக்க வைத்த புகைப்படம்..!”
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்த தேவயானியின் மகள் பிரியங்கா ராஜகுமாரன், தற்போது சினிமா உலகில் கதாநாயகியாக தனது முதல் அடியை எடுத்து வைத்துள்ளார். சமீபத்தில் அவர் நடித்த திரைப்படத்தின் பூஜை மற்றும் அறிமுக நிகழ்வுகள் நடைபெற்ற நிலையில், அங்கு எடுக்கப்பட்ட அவரது அழகிய போட்டோஷூட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அச்சு அசல் தனது தாயார் தேவயானியைப் போலவே இருப்பதாக ரசிகர்கள் இவரைப் பாராட்டி வருகின்றனர்.
பிரியங்கா அறிமுகமாகும் இந்தத் திரைப்படம், தெலுங்கில் பிளாக்பஸ்டர் ஹிட்டான ‘கோர்ட்’ (Court: State vs Nobody) என்ற படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். தமிழில் ‘ரஞ்சன்: தி அட்வகேட்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த லீகல் டிராமா படத்தில், மூத்த நடிகர் பிரசாந்த் வழக்கறிஞராக நடிக்கிறார். பிரசாந்தின் தந்தை தியாகராஜன் இயக்கும் இந்தப் படத்தின் மூலம் பிரியங்கா தனது திரையுலகப் பயணத்தைத் தொடங்கியிருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற படத்தின் தொடக்க விழாவின் போது, தேவயானி மற்றும் அவரது கணவர் ராஜகுமாரன் ஆகியோர் கலந்துகொண்டு தங்களது மகளை வாழ்த்தினர். தனது மகளுக்கு இவ்வளவு பெரிய வாய்ப்பை வழங்கிய நடிகர் பிரசாந்த் மற்றும் தியாகராஜன் ஆகியோருக்கு தேவயானி நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தார். தேவயானியின் மற்றுமொரு மகளான இனியா, ஏற்கனவே ஒரு இசை நிகழ்ச்சியில் பங்குபெற்று ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், இப்போது பிரியங்காவின் இந்த சினிமா அறிமுகம் ரசிகர்களிடையே பேசுபொருளாகியுள்ளது.
