CRIME
“சட்டம் அனைவருக்கும் சமம்..” நேற்று ஜெயிலர்… இன்று அதே ஜெயிலில் கைதி..! அதிகார துஷ்பிரயோகத்திற்கு கிடைத்த தரமான பரிசு..!!
அஜ்மீர் மகளிர் சிறையின் அன்றைய பொறுப்பு சிறை அலுவலர் திவ்யா சௌத்ரி, பெண் காவலர் சோனியா சௌத்ரியுடன் இணைந்து, ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த கிரண் மற்றும் சனா ஆகிய இரு பெண் கைதிகளை எவ்வித சட்டப்பூர்வ அனுமதியோ அல்லது சிறை பதிவேட்டில் பதிவோ இன்றித் தனது சொந்த காரில் வெளியே அழைத்துச் சென்றார். சிறையின் முதன்மை நுழைவாயிலில் பணியிலிருந்த ஊழியர்கள் ஆவணங்கள் இல்லாமல் கைதிகளை வெளியே அழைத்துச் செல்வதை எதிர்த்தபோது, அவர்களை ஜெயிலர் திவ்யாவும் சோனியாவும் மிரட்டினர். அதன் பின், அந்த இரு கைதிகளையும் அஜ்மீரில் உள்ள தமது சொந்த பிளாட்டுக்கு அழைத்துச் சென்று, வீட்டைச் சுத்தம் செய்வது உள்ளிட்ட வீட்டு வேலைகளைச் செய்ய வைத்துள்ளனர்.
இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்ததும் துறைரீதியான விசாரணை நடத்தப்பட்டு, சிறை அலுவலர் திவ்யா சௌத்ரியும் காவலர் சோனியா சௌத்ரியும் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். திவ்யா பிகானேரிலும், சோனியா ஜோத்பூரிலும் தங்கித் தலைமறைவாக இருக்க உத்தரவிடப்பட்ட போதிலும், இருவரும் அங்குச் செல்லாமல் கைது நடவடிக்கையிலிருந்து தப்பிக்கத் தலைமறைவாகினர். இதையடுத்து, அஜ்மீர் மத்திய சிறைக் கண்காணிப்பாளரின் புகாரின்பேரில், ஆகஸ்ட் 5 அன்று சிவில் லைன்ஸ் காவல் நிலையத்தில் இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அஜ்மீர் எஸ்பி ஹர்ஷவர்தன் அகர்வால் வழிகாட்டுதலின் கீழ், சைபர் பிரிவு மற்றும் காவல்துறை தனிப்படை ஆகியவை மொபைல் தரவு, தொழில்நுட்ப ஆதாரங்கள் மற்றும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து திவ்யாவின் இருப்பிடத்தைக் கண்டறிந்தன. அவர் கோட்டாவில் உள்ள ஒரு குடியிருப்பு பிளாட்டில் ஒளிந்திருந்தது தெரியவந்ததை அடுத்து, அஜ்மீர் காவல்துறையினர் அங்குச் சென்று அவரை அதிரடியாகக் கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட திவ்யா சௌத்ரி, நீதிபதி உத்தரவின்படி சிறையில் அடைக்கப்பட்டார்; இதனால், தான் எந்த அஜ்மீர் மத்திய சிறையில் ஜெயிலராகப் பணியாற்றினாரோ, அதே சிறையிலேயே தற்சமயம் கைதியாக அடைக்கப்பட்டுள்ளார். இ வழக்கில் தொடர்புடைய மற்றொரு குற்றவாளியான பெண் காவலர் சோனியாவை காவல்துறையினர் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
