LATEST NEWS
“தங்கமே தளபதி” என உருகிய மாஜி… “டீல் பேசுனதே அந்த கோடீஸ்வர அமைச்சர் தான்” பனையூர் கதவை தட்டிய முக்கிய புள்ளி… கொந்தளிக்கும் திமுக உடன்பிறப்புகள்..!!
2026 சட்டமன்றத் தேர்தலில் பெற்ற எதிர்பாராத வீழ்ச்சிக்குப் பிறகு திமுக பின்னடைவைச் சந்தித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவதற்கு அக்கட்சியின் முக்கியப் புள்ளிகள் சிலர் காய்நகர்த்தி வருகின்றனர். இதுவரை அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களான கடம்பூர் ராஜு, எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர் போன்ற மாவட்ட அளவிலான தலைவர்களே தவெகவை நோக்கி நகர்ந்த சூழலில், தற்போது தென் தமிழக திமுகவின் முன்னணி முன்னாள் அமைச்சர் ஒருவரும் பனையூர் கதவுகளைத் தட்டி வருகிறார்.
திமுகவின் கடந்த ஆட்சிக் காலத்தில் அடிக்கடி துறை மாற்றத்தைச் சந்தித்த அந்த ‘தங்கமான’ முன்னாள் அமைச்சருக்கு, 2026 தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டது. அதன் பிறகு கட்சி நடவடிக்கைகளில் இருந்து விலகியிருந்த அவர், சமீபத்திய திமுக போராட்டத்தில்கூடக் கட்சியின் வேட்டியைக் கட்டாமல் பங்கேற்றுத் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். அவர் தவெகவில் இணைய முயன்றபோது, ‘அவரைச் சேர்த்தால் உள்ளூரில் கட்சிக்கு பின்னடைவு ஏற்படும்’ எனக் கூறி உள்ளூர் தலைவர்கள் தவெக தலைமைக்கு முட்டுக்கட்டை போட்டதால் அந்த முடிவு தள்ளிப்போனது.
தவெகவில் சேர்வதற்குத் தனது செல்வாக்கை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள அந்த முன்னாள் அமைச்சர், தமக்கு இருக்கும் சமுதாய ஆதரவைக் காட்ட ‘கோடீஸ்வர’ முன்னாள் அமைச்சர் ஒருவரின் உதவியுடன் சென்னையில் பிரம்மாண்டமான சிறுபான்மையினர் மாநாடு ஒன்றை நடத்தியுள்ளார். தன் பின்னணியில் ஒரு பெரிய சமூகமே இருப்பதாகத் தவெக தலைமைக்கு உணர்த்துவதே இந்த மாநாட்டின் பிரதான நோக்கமாகப் பார்க்கப்படுகிறது.
ஆனால், இந்த மாநாட்டிற்காக அவர் திமுக தொண்டர்களையும் நிர்வாகிகளையுமே அழைத்துச் சென்று கூட்டம் கூட்டியது திமுக உடன்பிறப்புகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்னும் திமுகவிலேயே தொடர்ந்துகொண்டு, கட்சியின் அதிகாரத்தையும் ஆட்களையும் பயன்படுத்தி மாநாடு நடத்திவிட்டு, அதை வைத்துத் தவெகவில் ஐக்கியமாக நினைப்பது என்ன விதமான நியாயம் என தென் மாவட்ட திமுகவினர் கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதித் தோல்வி மற்றும் முக்கிய அமைச்சர்களின் சரிவுக்குப் பிறகு தவெக ஆட்சி அமைத்துள்ள சூழலில், தென் மண்டலத்தைச் சேர்ந்த இந்த ‘பாடகர்’ பெயரைக் கொண்ட முன்னாள் அமைச்சரின் அடுத்தகட்ட நகர்வு தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பையும், திமுக – தவெக இடையேயான உட்கட்சிப் பூசல்களையும் மேலும் சூடேற்றியுள்ளது.
