LATEST NEWS
“கொளத்தூர் தீர்ப்பு வர்ற அன்னைக்கு பாயாசம் ரெடி” – ஸ்டாலின் வழக்கை வைத்து தவெக போடும் மாஸ்டர் பிளான்… பொன்ராஜ் உடைத்த ரகசியம்..!!
கொளத்தூர் தொகுதியின் தேர்தல் முடிவை எதிர்த்து முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழக்கு தொடுத்துள்ளதை நியாயப்படுத்தும் வகையில் பேசத் தொடங்கியுள்ள அரசியல் விமர்சகர் டாக்டர் பொன்ராஜ், EVM விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தின் அணுகுமுறையைக் கடுமையாகச் சாடியுள்ளார். “கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 40 இடங்களையும் கைப்பற்றியபோதே EVM முறைகேடு குறித்து திமுக வழக்கு தொடர்ந்தது; எனவே, தேர்தலில் தோற்றதால் மட்டுமே இப்போது வழக்கு போடுகிறார்கள் என்று சொல்வது முற்றிலும் தவறானது” என சமீபத்தில் அளித்த பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் லாபங்களுக்காகவே வாக்குப்பதிவு இயந்திர முறை தொடர்வதாகக் குற்றம் சாட்டிய பொன்ராஜ், “அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்திய தேர்தல் முறையைப் பாராட்டுகிறார் என்றால், அவரது நாட்டிலும் இதைப் பின்பற்ற மோடி பரிந்துரைக்க வேண்டியதுதானே?” எனக் கேள்வி எழுப்பினார். கார்ப்பரேட் நிறுவனங்களுக்குச் சாதகமாக ஆட்சியைக் தக்கவைக்கவே EVM பயன்படுத்தப்படுவதாகவும், சோர்ஸ் கோட் (Source Code) மற்றும் சிம்பல் லோடிங் அமைப்புகளைத் தேர்தல் ஆணையம் வெளிப்படையாக ஆய்வு செய்ய அனுமதிக்காது என்பதால், நீதிமன்றத்திலும் இ வழக்கில் சாதகமான முடிவுகள் வருவது கடினம் என்றும் அவர் தெரிவித்தார்.
அதேவேளையில், தவெகவை கடுமையாகச் சாடிய அவர், “பாஜகவின் கொள்கை எதிரி என்று தவெக சொல்வதெல்லாம் மக்களை ஏமாற்றுவதற்கான வெறும் ‘பாயாசம்’; உண்மையில் அது பாஜகவின் நிழல் (Proxy) கட்சியே தவிர வேறில்லை” எனக் விமர்சித்தார். காங்கிரஸ் கட்சி இந்த EVM விவகாரத்தில் உறுதியான குரலை உயர்த்தத் தவறிவிட்டதாகவும், ராகுல் காந்தி இருக்கும் வரை அக்கட்சிக்கு விமோசனம் இல்லை என்றும் அவர் தனது அதிருப்தியைப் பதிவு செய்தார்.
தமிழக முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ள புதிய நலத்திட்டங்களையும் பொன்ராஜ் விமர்சிக்கத் தவறவில்லை. “ரூ.20,000-க்கு கீழ் வருமானம் உள்ளவர்களுக்கு 3 சிலிண்டர்கள் இலவசம் மற்றும் நகர்ப்புற பேருந்துகளில் இலவச பயணம் போன்ற அறிவிப்புகள் ஏமாற்று வேலை. அனைத்துக் குடும்பங்களுக்கும் 6 சிலிண்டர்கள் இலவசம் என்று வாக்குறுதி கொடுத்துவிட்டு, இப்போது இரண்டரை லட்சம் ரூபாய் வருமான வரம்பு விதிப்பதும், பேருந்து திட்டத்தை நகர்ப்புறங்களுக்கு மட்டும் சுருக்குவதும் அரைகுறை அணுகுமுறையாகும்” என்றார்.
நிதிநிலை மற்றும் பட்ஜெட் குறித்த தெளிவான புரிதல் இல்லாமல் இதுபோன்ற வாக்குறுதிகளைத் தவெக அரசு அளித்ததாகச் சாடிய அவர், சொன்ன திட்டங்களை முழுமையாக நிறைவேற்றாமல் மக்களைத் திசைதிருப்பும் முயற்சியில் இறங்கியிருப்பதாகக் குற்றம் சாட்டினார். EVM இயந்திரங்களை உடனடியாக ஒழிக்காவிட்டால் நாடு கார்ப்பரேட்டுகளின் முழுமையான அடிமையாக மாறிவிடும் என்றும், மக்களின் அடிப்படை உரிமைகள் பறிபோகும் என்றும் தனது பேட்டியில் டாக்டர் பொன்ராஜ் எச்சரித்துள்ளார்.
