LATEST NEWS
“மீண்டும் கோரத்தாண்டவம் ஆடும் நிலச்சரிவு..” காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட அரசு கட்டிடம்.. நெஞ்சை பதறவைக்கும் வீடியோ..!!
நேபாளத்தில் கடந்த மூன்று நாட்களாக பெய்து வரும் கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக அங்கு மீண்டும் பயங்கரப் பேரழிவு ஏற்பட்டுள்ளது. இந்த இயற்கைச் சீற்றத்தினால் இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 14 பேர் மாயமாகி உள்ளதாகத் தற்போதைய அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள சூழலில், பாகுலுங் மாவட்டத்தின் கல்கோட் பகுதியில் உள்ள ஒரு அரசு கட்டிடம் காட்டாற்று வெள்ளத்தில் முழுமையாக அடித்துச் செல்லப்பட்டுள்ளது. மேலும், காளி கந்தகி ஆற்றில் ஆபத்தான அளவிற்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதே சமயம், மனாங் பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி இரண்டு மலையேறுபவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இந்தத் தொடர் பேரிடரால் நேபாளத்தில் இதுவரை 747 குடும்பங்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 143 வீடுகள் முற்றிலும் இடிந்து சேதமடைந்துள்ளன. குறிப்பாக மனாங், மியாக்டி, பர்பத் மற்றும் பால்பா உள்ளிட்ட மாவட்டங்களில் நிலவரம் மிகவும் மோசமாக உள்ளதாக மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர். கடந்த மாத தொடக்கத்தில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தின் பாதிப்புகள் மாறுவதற்குள், தற்போது மீண்டும் நேபாளத்தில் நிலைமை தீவிரமடைந்துள்ளதால் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் மிக முடுக்கிவிடப்பட்டுள்ளன.
