LATEST NEWS
அரசு ஊழியர்களுக்கு ஷாக்..! ஒரே நபர்… ஒரே கார்..! இனி 2-வது காருக்கு சான்ஸே இல்லை..! மூத்த அதிகாரிகளின் சொகுசுக்கு செக் வைத்த நிதி அமைச்சகம்..!!
மத்திய அரசாங்கத்தில் பணிபுரியும் ஒரு அதிகாரி ஒரு அரசு வாகனத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மூத்த அதிகாரிகள் மற்றொரு அமைச்சகம், துறை, பொதுத்துறை நிறுவனம் அல்லது தன்னாட்சி அமைப்பில் கூடுதல் பொறுப்பு வகித்தாலும் கூட, அவர்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட அரசு வாகனங்கள் ஒதுக்கப்படுவது தடை செய்யப்பட்டுள்ளது. அரசு வாகனங்களின் தவறான பயன்பாட்டைக் கட்டுப்படுத்தவும், பணி இரட்டிப்பை நீக்கவும், பொது வளங்களைச் சிக்கனமாகப் பயன்படுத்துவதை உறுதி செய்யவும் நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் செலவினத் துறை இந்த திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை அமல்படுத்துமாறு அனைத்து அமைச்சகங்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.
ஏற்கனவே அரசு வாகனத்தைப் பயன்படுத்த உரிமை பெற்ற அதிகாரிக்கு வேறொரு அமைப்பில் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டால், அவர் தனது முந்தைய வாகனத்தையே தொடர்ந்து பயன்படுத்த வேண்டுமே தவிர புதிய வாகனம் பெற முடியாது. மேலும், அலுவல் ரீதியான பணி அல்லது அங்கீகரிக்கப்பட்ட சுற்றுப்பயணங்களைத் தவிர்த்து, பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தன்னாட்சி அமைப்புகளுக்குச் சொந்தமான வாகனங்களை மத்திய அரசு அதிகாரிகள் பயன்படுத்துவதற்கும் இந்த உத்தரவு தடை விதிக்கிறது. ஏற்கனவே 2022 செப்டம்பரில் வெளியான அறிவிப்பின்படி, தகுதியுள்ள அதிகாரிகள் மாதாந்திரப் போக்குவரத்துப் படியைத் தவிர்த்து, மாதம் ரூ. 3,000 கட்டணம் செலுத்தி அரசு வாகனங்களைத் தனிப்பட்ட பயணங்களுக்கு பயன்படுத்தலாம் என்ற விதிமுறையும் நினைவுகூரப்பட்டுள்ளது.
நிர்வாகத் திறனை மேம்படுத்துவதற்கும், அரசு வளங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுப்பதற்கும், தேவையற்ற போக்குவரத்துக் செலவுகளைக் குறைப்பதற்கும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ‘ஒரு தகுதியுள்ள அதிகாரிக்கு ஒரு அலுவல் வாகனம்’ என்ற கொள்கை நிதிச் சிக்கனத்தை ஊக்குவிப்பதோடு, வாகன நிர்வாகத்தைச் சீரமைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பயன்பாட்டில் இல்லாமல் இருக்கும் அரசு வாகனங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதோடு, 2022-ல் பிறப்பிக்கப்பட்ட முதன்மை அலுவலகக் குறிப்பாணையின் அடிப்படையிலான இந்த புதிய விதிமுறைகளை அனைத்துத் துறைகளும் கண்டிப்பாகப் பின்பற்றுவதை உறுதிசெய்ய வேண்டும் என்றும் அரசு மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
