LATEST NEWS
“ஊழலில் உச்சம் தொட்டவர்களைச் சேர்ப்பதா..? முதலமைச்சர் விஜய்யை எச்சரிக்கும் சகாயம் ஐ.ஏ.எஸ்..!!!
முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில் அமைச்சர்களாகப் பணியாற்றிய சி. விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தது அரசியல் தளத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. தூய்மையான மற்றும் ஊழலற்ற நிர்வாகத்தை வழங்குவோம் என்ற வாக்குறுதியுடன் களமிறங்கிய தவெகவில், பல்வேறு வழக்குகள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு வரும் தலைவர்களைச் சேர்ப்பது கட்சியின் லட்சியத்துக்கே பெரும் பின்னடைவாக அமையும் என முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கிரானைட் ஊழலை வெளிக்கொண்டு வந்த நேர்மையான அதிகாரியான சகாயம், ஊழல் எதிர்ப்பு முடிவுகளுக்காகத் தொடக்கத்தில் விஜய்யின் அரசியலை வரவேற்றார். இருப்பினும், பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான குட்கா முறைகேடு, சிபிஐ மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குகளில் தொடர்புடைய சி. விஜயபாஸ்கர் போன்றவர்களைக் கட்சியில் இணைப்பது, மக்கள் மத்தியில் விஜய் கட்டியெழுப்பிய நம்பிக்கையைச் சீர்குலைக்கும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வட இந்தியாவில் பாஜக பயன்படுத்தும் ‘வாஷிங் மெஷின்’ தற்போது தமிழ்நாட்டிற்கும் வந்துவிட்டது போல தெரிகிறது” எனக் கிண்டல் செய்துள்ளது. குட்கா ஊழலின் கரைகளைத் தவெகவின் புதிய ‘சலவை இயந்திரம்’ வெளுத்து விடுமா என திமுக எம்பிக்கள் கேள்வி எழுப்பி வரும் நிலையில், தவெகவின் கூட்டணிக் கட்சிகளும் மற்றும் ‘அறப்போர் இயக்கம்’ போன்ற ஊழல் எதிர்ப்பு அமைப்புகளும் தங்களது அதிருப்தியை வெளிப்படையாகப் பதிவு செய்து வருகின்றன.
ஆட்சியைப் பிடிப்பதற்காகவும் தொகுதிகளைக் கைப்பற்றுவதற்காகவும் இதுபோன்ற மாற்றுக்கட்சித் தலைவர்களைச் சேர்ப்பது தவெகவின் தூய்மைப் பிம்பத்தைச் சிதைத்துவிடும் என்று சகாயம் சுட்டிக்காட்டியுள்ளார். மக்களுக்கு அளித்த வாக்குறுதியின்படி ஊழல்வாதிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் மாற்று அரசியலையே விஜய் தொடர வேண்டும் எனக் கூறியுள்ள சூழலில், இந்த விமர்சனங்களுக்கு மத்தியில் முதலமைச்சர் விஜய் தனது ஊழல் எதிர்ப்பு நிலைப்பாட்டை எவ்வாறு தக்கவைப்பார் என்பதே தற்போதைய பிரதான விவாதமாக உருவெடுத்துள்ளது.
