LATEST NEWS
மகன்களால் கைவிடப்பட்ட தாய்..! காப்பாற்றும் மகளுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்கிட… ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பு..!!
ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள தனபாத் நிலக்கரி சுரங்க அமைப்பில் உதவியாளராகப் பணியாற்றி வந்த அர்ஜுன் பிரசாத் என்பவர், கடந்த 2013-ம் ஆண்டு பணியில் இருக்கும்போதே உயிரிழந்தார். அவரது மறைவுக்குப் பிறகு, அவரது குடும்பத்தினர் நிலக்கரி சுரங்கத்திலிருந்து கிடைக்கும் குறைந்தளவு ஓய்வூதியத் தொகையை வைத்தே வாழ்ந்து வந்தனர். உயிரிழந்த ஊழியரின் மனைவி தனது கணவருக்கு ஏற்கனவே சிறுநீரக தானம் செய்திருந்ததால், அவரால் கடுமையான உடல் உழைப்பு கோரும் சுரங்கப் பணிகளைச் செய்ய முடியாத நிலை இருந்தது. இதற்கிடையே, அர்ஜுன் பிரசாத்திற்கு இரு மகன்களும் ஒரு மகளும் உள்ள நிலையில், மகன்கள் இருவரும் தங்களின் தாயைப் பராமரிக்க மறுத்துத் தனியாகச் சென்றுவிட்டனர்.
இதனையடுத்து, வறுமையில் வாடிய வயது முதிர்ந்த தாயைப் பராமரிக்கும் பொறுப்பு திருமணமான மகளுக்கு வந்தது. மகளின் கணவருக்குப் போதிய வருமானம் இல்லாத நிலையிலும், தாய் மற்றும் தன் குழந்தைகளை அவரே கவனித்து வந்தார். இதனால், தந்தையின் மறைவுக்குப் பிறகு தனக்குக் கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்க வேண்டும் என்று கோரி மகள் விண்ணப்பித்தார். ஆனால், ‘திருமணமான மகள்களுக்குக் கருணை அடிப்படையில் வேலை வழங்கிட முடியாது’ என்றும், அவரது கணவருக்கு வருமானம் உள்ளது என்றும் கூறி, சுரங்க நிர்வாகம் அவரது கோரிக்கையை நிராகரித்தது. இதனை எதிர்த்து பாதிக்கப்பட்ட பெண் ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தீபக் ரோஷன், திருமணமான காரணத்தினாலேயே ஒரு பெண்ணுக்குக் கருணை அடிப்படையில் வேலை மறுக்கப்படக் கூடாது என்று தீர்ப்பளித்தார். மகன்களால் கைவிடப்பட்ட நிலையில், தனது கணவனுக்குச் சிறுநீரகம் தானம் செய்து உடல்நலக் குறைவுடன் இருக்கும் முதிய தாயைப் பராமரித்து வரும் மகளின் நிலையைக் நீதிமன்றம் கவனத்தில் கொண்டது. மேலும், கணவருக்குக் குறைந்த வருமானம் இருப்பதால் மட்டுமே ஒரு பெண் தன் தந்தையைச் சார்ந்திருக்கவில்லை என்று கூற முடியாது எனத் தெரிவித்த நீதிபதி, எட்டு வாரங்களுக்குள் அம்மகளுக்குக் கருணை அடிப்படையில் தகுந்த அரசு பணி வழங்கிட வேண்டும் என்று நிலக்கரி சுரங்க நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார்.
