பயங்கரவாதியாய் மாறிய துணை விமானி.. நடுவானில் இந்திய கேப்டனுக்கு கத்திக்குத்து… 17,000 அடி செங்குத்தாக சரிந்த விமானம்.. ஃபிளைதுபாய் விண்மனத்தில் நடந்தது என்ன..? – cinefeeds
Connect with us

LATEST NEWS

பயங்கரவாதியாய் மாறிய துணை விமானி.. நடுவானில் இந்திய கேப்டனுக்கு கத்திக்குத்து… 17,000 அடி செங்குத்தாக சரிந்த விமானம்.. ஃபிளைதுபாய் விண்மனத்தில் நடந்தது என்ன..?

Published

on

துபாயிலிருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நோக்கிச் சென்றுகொண்டிருந்த ஃப்ளைதுபாய் (FZ1073) பயணிகள் விமானத்தில், நடுவானில் அரங்கேறிய கத்திக்குத்துச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விமானம் சவூதி அரேபியாவின் வான்வெளியில் பறந்துகொண்டிருந்தபோது, ஓமன் நாட்டைச் சேர்ந்த துணை விமானி திடீரென இந்தியாவைச் சேர்ந்த தலைமை விமானி ஸ்மித் மச்சாரைக் கத்தியால் குத்தியுள்ளார். இந்தத் தாக்குதலால் விமானம் கட்டுப்பாட்டை இழந்து, இரண்டே நிமிடங்களில் 34,000 அடியிலிருந்து 17,000 அடிக்குக் கீழே செங்குத்தாகச் சரிந்து விழுந்தது.

விமானம் சரிந்ததால் பதற்றமடைந்த பயணிகள் மற்றும் விமானப் பணியாளர்கள் சிலர் உடனடியாக காக்பிட் (விமான அறை) பகுதிக்குள் புகுந்து, வன்முறையில் ஈடுபட்ட துணை விமானியைப் போராடித் தடுத்தனர். அதிர்ஷ்டவசமாக அதே விமானத்தில் பயணித்த மாற்று விமானிகள் உடனடியாக விமானத்தின் கட்டுப்பாட்டைத் தங்கள் கையில் எடுத்தனர். இதனைத் தொடர்ந்து, சவூதி அரேபியாவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள தபூக் விமான நிலையத்தில் காலை 06:58 மணிக்கு விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. வன்முறையில் ஈடுபட்ட துணை விமானியைச் சவூதி அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

Advertisement

இச்சம்பவம் குறித்துப் பேசிய இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, இது இஸ்ரேலியர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட ஒரு திட்டமிடப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் முயற்சி என்று பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். விமானத்தில் இருந்த 180 பயணிகளில் பெரும்பாலானோர் இஸ்ரேலியர்கள் என்பதால், அனைவரையும் கொல்வதற்காக விமானத்தை மோதி விபத்துக்குள்ளாக்கத் துணை விமானி முயன்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், பயங்கரவாதியைப் போலச் செயல்பட்ட துணை விமானியை எதிர்த்து, சிங்கத்தைப் போலப் போராடி பயணிகளைக் காப்பாற்றிய இந்தியத் தலைமை விமானிக்கும், சமயோசிதமாகச் செயல்பட்ட பயணிகளுக்கும் அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இருப்பினும், இது உண்மையில் பயங்கரவாதத் தாக்குதலா அல்லது விமானிகளுக்கு இடையே ஏற்பட்ட தனிப்பட்ட முன்விரோதமா என்பது இன்னும் முழுமையாகத் தெரியவில்லை. இந்த விவகாரம் தொடர்பாகச் சவூதி அரேபியா மற்றும் இஸ்ரேல் அரசு தீவிர விசாரணை நடத்தி வருகின்றன. உண்மை என்னவென்று அதிகாரிகள் கண்டறியும் வரை, யாரும் முன்கூட்டியே வதந்திகளையோ அல்லது யூகங்களையோ பரப்ப வேண்டாம் என்றும், விமானத்தில் இருந்த பயணிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர் என்றும் ஃப்ளைதுபாய் நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in