CRIME
“உன் அக்காவை லவ் பண்ண சொல்லு… இல்லன்னா ரெண்டு பேரையும் கொன்னுடுவேன்..” 10ம் வகுப்பு மாணவியை மிரட்டிய 19 வயது வாலிபர்.. போக்ஸோவில் கைது..!!
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள பள்ளிப்பட்டு தாலுகாவில் உள்ள அரசுப் பள்ளியில், சகோதரிகளான இருவர் படித்து வந்துள்ளனர். இதில் அக்கா 11 ஆம் வகுப்பிலும், தங்கை 10 ஆம் வகுப்பிலும் படித்து வருகின்றனர். 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை, அதே பகுதியைச் சேர்ந்த கோபால் (19) என்ற வாலிபர் ஒருதலைப்பட்சமாகக் காதலிப்பதாகக் கூறி தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இந்நிலையில், 10 ஆம் வகுப்பு படிக்கும் தங்கை டியூஷன் முடித்துவிட்டு வீட்டிற்குச் செல்வதற்காக அரசு பேருந்து நிலையத்தில் காத்திருந்துள்ளார். அப்போது அங்கு வந்த கோபால், அந்தச் சிறுமியிடம் “உன் அக்காவை என்னைக் காதலிக்கச் சொல்” எனக் கூறி தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். மேலும், “அப்படி காதலிக்காவிட்டால் உங்கள் இருவரையும் கொன்றுவிடுவேன்” என்றும் மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் அச்சமடைந்த மாணவி, வீட்டிற்குச் சென்று தனது தாயாரிடம் இதுகுறித்து கூறி அழுதுள்ளார்.
இதனையடுத்து மாணவியின் தாயார், திருத்தணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார், இச்சம்பவத்தில் தொடர்புடைய கோபால் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, போக்சோ சட்டத்தின் கீழ் அவரைக் கைது செய்தனர். திருத்தணியைச் சுற்றியுள்ள மகளிர் மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கு இளைஞர்களும் மாணவர்களும் காதலிக்கக் கோரி தொடர்ச்சியாக தொல்லை கொடுத்து வருவதும், சமீபத்தில் இதனால் ஒரு படுகொலை சம்பவம் நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
