LATEST NEWS
பெற்றோர்களே கொஞ்சம் கவனியுங்க..! யூடியூப் சவாலால் மாயமான சிறுவர்கள்… செங்கல் சூளையில் காவல்துறை கண்டுபிடித்த ரகசிய அறை… சீக்ரெட் ஹவுஸ்’ விளையாட்டால் மீரட்டில் நடந்த பரபரப்பு..!!
உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் மாவட்டம் ஹஸ்தினாபூர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், யூடியூபில் ‘சீக்ரெட் ஹவுஸ்’ விளையாட்டைப் பார்த்த இரு சிறுவர்கள், அதில் கூறப்பட்ட சவாலை நிறைவேற்றுவதற்காக வீட்டை விட்டு ஓடிப்போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜென் ஆல்ஃபா தலைமுறைக் குழந்தைகளிடம் அதிகரித்து வரும் மொபைல் போன் அடிமைத்தனத்தின் தீவிரத்திற்கு இச்சம்பவம் மற்றொரு உதாரணமாக அமைந்துள்ளது.
யூடியூப்பில் 24 மணி நேரம் ரகசிய இடத்தில் ஒளிந்திருக்கும் ‘சீக்ரெட் ஹவுஸ்’ சவால் வீடியோவைப் பார்த்த அச்சிறுவர்கள், அதைப் பார்த்து ஈர்க்கப்பட்டு தாங்களும் அதேபோல செய்ய முடிவு செய்தனர். இதற்காக அவர்கள் வீட்டை விட்டு வெளியேறி, அருகிலுள்ள ஒரு செங்கல் சூளை மற்றும் பண்ணை வீட்டிற்கு அருகே செங்கற்களைக் கொண்டு தங்களுக்கு என ஒரு ரகசிய அறையைக் கட்டி, அதில் 24 மணி நேரமும் ஒளிந்திருக்க முயன்றுள்ளனர். சிறுவர்கள் திடீரென காணாமல் போனதால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், சுற்றுவட்டாரத்திலும் உறவினர்கள் வீடுகளிலும் தேடியும் கிடைக்காததால் உடனடியாகக் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்த கிராமப்புற எஸ்பி அபிஜீத் குமார் தலைமையில் காவல் துறையினர், சர்க்கிள் அதிகாரி மற்றும் மிஷன் சக்தி குழுவினர் உடனடியாகத் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, பொதுமக்களிடம் விசாரணை நடத்திய காவல்துறை, சில மணி நேர தேடுதலுக்குப் பின் இரு சிறுவர்களையும் அவர்கள் உருவாக்கிய ரகசிய இடத்திலிருந்து பாதுகாப்பாக மீட்டு, அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.
