LATEST NEWS
மரணத்தோடு விளையாட்டு..! சீறிப்பாயும் ஆற்றில் பாய்ந்த இளைஞர்கள்… ஆபத்தான வீடியோவைப் பகிர்ந்து எச்சரிக்கும் உத்தரகண்ட் காவல்துறை..!!
மழைக்காலத்தில் ஆற்று வெள்ளத்தில் ஆபத்தான முறையில் ஸ்டன்ட் செய்ய வேண்டாம் என விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், உத்தரகண்ட் காவல்துறை சமூக வலைதளங்களில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளது. அந்த வீடியோவில், மலைப்பகுதியில் சீறிப்பாயும் ஆற்றுக்கு நடுவே உள்ள ஒரு பெரிய பாறையில் மூன்று இளைஞர்கள் நிற்கின்றனர். சுற்றிலும் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடும் வேளையில், அவர்கள் அச்சமின்றி அந்தப் பெருவெள்ளத்தில் குதித்து நீந்தத் தொடங்குகின்றனர். இந்த அதிர்ச்சியளிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சில வினாடி விறுவிறுப்பிற்காகவும், நண்பர்களுடன் பொழுதுபோக்கிற்காகவும் அல்லது வீடியோ பதிவிற்காகவும் உயிரைப் பணயம் வைத்து இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது பெரும் அசம்பாவிதங்களுக்கு வழிவகுக்கும் என காவல்துறை சுட்டிக்காட்டியுள்ளது. மழைக்காலத்தில் மலைப்பகுதி ஆறுகளின் நீர்வரத்து மிகவும் ஆபத்தானது. நீரின் மேற்பரப்பு சாதாரணமாகத் தெரிந்தாலும், நீரின் அடியில் இருக்கும் கடுமையான நீரோட்டம், கூர்மையான பாறைகள் மற்றும் திடீர் ஆழங்கள் எவ்வளவு சிறந்த நீச்சல் வீரரின் கட்டுப்பாட்டையும் இழக்கச் செய்து உயிருக்கே ஆபத்தாய் முடியக்கூடும்.
பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவே உத்தரகண்ட் காவல்துறை இந்த வீடியோவைத் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. “பொங்கி வழியும் ஆறுகளிலிருந்து தள்ளி நிற்பதே பாதுகாப்பு” என்று குறிப்பிட்ட காவல்துறை, மழைக்காலத்தில் ஆறுகள், அருவிகள் மற்றும் நீர்நிலைகளுக்கு அருகில் செல்லும் போது பொதுமக்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், யாராவது இதுபோன்று ஆபத்தான செயல்களில் ஈடுபடுவதைக் கண்டால், உடனடியாக 112 என்ற அவசர உதவி எண்ணிற்குத் தகவல் தெரிவிக்குமாறும் அறிவுறுத்தியுள்ளது.
