LATEST NEWS
“ஒரே அடியில் காலி பண்ணிடுவோம்… எங்ககிட்ட தப்பவே முடியாது..” ஈரானை மிரட்டும் டொனால்ட் டிரம்ப்… பதற்றத்தில் உலக நாடுகள்..!!
அமெரிக்கா நினைத்தால் ஈரானின் மீது எப்போது வேண்டுமானாலும் ராணுவத் தாக்குதலை நடத்த முடியும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். அதேசமயத்தில், அந்த நாட்டுடன் ஒரு பெரிய மற்றும் சிறப்பான ஒப்பந்தத்தை எட்டவும் வாய்ப்புள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஈரானின் அணு ஆயுதத் திட்டங்களைத் தடுத்து நிறுத்துவதுடன், அவசியப்பட்டால் ராணுவ நடவடிக்கையிலும் இறங்குவது என்ற இரட்டை நிலைப்பாட்டை வாஷிங்டன் தீவிரமாக பின்பற்றி வருவதை அவரது இந்தப் பேச்சு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
ஜார்ஜியா மாகாணத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய டிரம்ப், ஈரான் விவகாரத்தில் கடுமையான நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார். “நாங்கள் அவர்களை முற்றிலுமாக முடிக்க வேண்டியிருக்கும் அல்லது அவர்கள் எங்களுடன் ஒரு நல்ல ஒப்பந்தத்திற்கு வரக்கூடும்” என்று குறிப்பிட்ட அவர், இதில் எந்த வழிமுறையைத் தேர்ந்தெடுப்பது என்பது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றாலும், அமெரிக்கா எப்போதுமே வெற்றியாளராகவே இருக்கும் என்று தெரிவித்தார். அமெரிக்க ராணுவம் மற்றும் கடற்படை ஈரானின் ராணுவத் தளவாடங்களைச் கடுமையாக சேதப்படுத்தியுள்ளதாக அவர் பெருமிதம் தெரிவித்தார்.
ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்குவதை எப்பொழுதும் அனுமதிக்க முடியாது என்பதில் அமெரிக்கா உறுதியாக இருப்பதாக டிரம்ப் மீண்டும் வலியுறுத்தினார். கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட ராணுவ நடவடிக்கைகள் மூலம் ஈரானின் அணுசக்தி செறிவூட்டும் திறன்கள் பெருமளவு தகர்க்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இதற்கிடையில், ஈரானிய தரப்பிலிருந்து எவ்வித புதிய சமரசப் பேச்சுகளும் வரவில்லை என்று ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தொடர் அச்சுறுத்தல்களால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
