LATEST NEWS
சாதிக்க வயது ஒரு தடையல்ல.. 91 வயதில் முதல் பாஸ்போர்ட்.. 96 வயதில் உலகின் 7 கண்டங்கள்.. பேரனுடன் சேர்ந்து உலகையே சுற்றி வந்த சாதனைப் பாட்டி…!!
வாழ்க்கையில் எதையும் சாதிக்க வயது ஒரு தடையல்ல என்பதை அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தைச் சேர்ந்த 96 வயதான ஜாய் ரியான் என்ற மூதாட்டி நிரூபித்துள்ளார். ‘பாட்டி ஜாய்’ என்று அன்புடன் அழைக்கப்படும் இவர், தனது 91 வயது வரை வெளிநாட்டுப் பயணமே மேற்கொள்ளாத நிலையில், தற்போது தனது 96-வது வயதில் உலகின் ஏழு கண்டங்களையும் சுற்றிப் பார்த்துப் புதிய சாதனை படைத்துள்ளார். இந்த உலகச் சுற்றுப்பயணத்திற்கு அவரது 45 வயது பேரன் பிராட் ரியான் உறுதுணையாக இருந்துள்ளார். கடந்த 2015-ஆம் ஆண்டு இலையுதிர் காலத்தில், அதுவரை ஒரு மலையைக் கூட நேரில் பார்த்திராத தனது பாட்டிக்குப் புதிய அனுபவங்களைக் கொடுக்க விரும்பிய பிராட், அவரை மலைப்பகுதியில் முகாமிட அழைத்துச் சென்றார். இந்தப் பயணம் சுமார் 10 ஆண்டுகளாகப் பிரிந்திருந்த பாட்டி மற்றும் பேரனுக்கு இடையிலான உறவை மீண்டும் நெருக்கமாக்கியது.
அதனைத் தொடர்ந்து, அமெரிக்காவில் உள்ள மொத்தம் 63 தேசியப் பூங்காக்களையும் சுற்றிப் பார்க்க வேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்த இருவரும், கடந்த 2023-ஆம் ஆண்டு மே மாதத்தில் அதனை வெற்றிகரமாக நிறைவேற்றினர். அதன் பிறகே இவர்களது பயணம் உலக நாடுகளை நோக்கித் திரும்பியது. வெளிநாடுகளுக்குச் செல்ல பாஸ்போர்ட் இல்லாததால், தனது 91-வது வயதில் முதன்முறையாகப் பாஸ்போர்ட் பெற்ற ஜாய் ரியான், பேரனுடன் இணைந்து கென்யாவில் யானைகளையும், அயர்லாந்தில் பழமையான கோட்டைகளையும் கண்டு ரசித்தார். சமீபத்தில் கடந்த செப்டம்பர் மாதம் தாய்லாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டதன் மூலம், உலகின் ஏழு கண்டங்களையும் சுற்றிப் பார்த்த தனது இலக்கை அவர் நிறைவு செய்தார்.
குறிப்பாகத் தங்களது கடைசிப் பயணக் கண்டமான ஆஸ்திரேலியாவில் கோலா கரடிகளையும் அவற்றின் குட்டிகளையும் பார்த்து பாட்டி ஜாய் மிகுந்த மகிழ்ச்சியடைந்தார். தாய்லாந்துப் பயணத்தின்போது புத்த துறவிகளுடன் உரையாடியதுடன், அங்குள்ள கோயில்களையும் இருவரும் பார்வையிட்டனர். இந்தப் பயணங்கள் புதிய இடங்களைப் பார்ப்பதோடு மட்டுமல்லாமல், கடந்த கால மனவேதனைகளை மறந்து வாழ்க்கையைப் பற்றிய புதிய புரிதலையும் மகிழ்ச்சியையும் கொடுத்ததாகப் பேரன் பிராட் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். முதுமை என்பது ஓய்வெடுப்பதற்கு மட்டுமல்ல, மனதில் ஆர்வம் இருந்தால் எந்த வயதிலும் புதிய கனவுகளைத் துரத்திச் சாதிக்கலாம் என்பதற்குப் பாட்டி ஜாய் சிறந்த உதாரணமாகத் திகழ்கிறார்.
