LATEST NEWS
“இது என்ன புது விதமான ஆசை..?” உயிருடன் இருக்கும்போதே தனக்குத்தானே 80 வயது தாத்தா செய்த பகீர் காரியம்.. வியப்பில் ஆழ்ந்த கிராமம்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் பாக்பத் மாவட்டத்தைச் சேர்ந்த 80 வயதான பல்ஜோர் சிங் என்பவர், தான் உயிருடன் இருக்கும்போதே தனக்குத்தானே 13-ஆம் நாள் இறுதிச் சடங்கு விருந்து நடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் ஆச்சரியத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக ஒருவர் உயிரிழந்த பிறகு அவரது குடும்பத்தினரால் நடத்தப்படும் இந்தச் சடங்கை, பல்ஜோர் சிங் தனது வாழ்நாளிலேயே மிகப் பிரம்மாண்டமாகத் தனது வீட்டில் ஏற்பாடு செய்துள்ளார். இந்த விநோதமான மற்றும் பிரம்மாண்டமான விருந்து நிகழ்வில் கலந்துகொள்வதற்காகப் பிராமணர்கள் மற்றும் உறவினர்கள் உட்பட 900-க்கும் மேற்பட்ட விருந்தினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுத் தடபுடலான விருந்து நடைபெற்று வருகிறது.
பல்ஜோர் சிங்கின் மனைவி பல ஆண்டுகளுக்கு முன்பே காலமாகிவிட்டார். இவருக்கு ஒரே ஒரு மகள் மட்டுமே உள்ள நிலையில், அவருக்கும் திருமணமாகிப் புகுந்த வீட்டில் வசித்து வருகிறார். இதனால் தனது மறைவுக்குப் பிறகு இந்தச் சடங்குகளை யார், எப்படிச் செய்வார்களோ என்ற எண்ணத்திலோ அல்லது தனது ஆசையை நிறைவேற்றிக்கொள்ளும் வகையிலோ அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. தான் உயிருடன் இருக்கும்போதே ஊரே வியக்கும் வகையில் தனக்குத்தானே இறுதிச் சடங்கு விருந்து வைத்த 80 வயது முதியவரின் இந்தச் செயல் சமூக வலைதளங்களிலும் அப்பகுதி மக்களிடையேயும் பேசுபொருளாக மாறியுள்ளது.
