CRIME
அடக்கடவுளே.. அலுவலக படிக்கட்டில் மறைந்திருந்த எமன்.. ரத்த வெள்ளத்தில் சரிந்த மூத்த வழக்கறிஞர்.. சிசிடிவியில் சிக்கிய பகீர் காட்சி..!!
கர்நாடக மாநிலம் சிக்கபல்லாப்புரா மாவட்டம் கௌரிபிதானூரில், மூத்த வழக்கறிஞர் சன்னக்கி வெங்கடராமப்பா என்பவரை மர்ம நபர் ஒருவர் கழுத்தில் கத்தியால் குத்தி படுகாயப்படுத்திய சம்பவம் அப்பகுதி வழக்கறிஞர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செவ்வாய்க்கிழமை காலை சுமார் 10:30 மணியளவில், வழக்கறிஞர் வெங்கடராமப்பா மகாத்மா காந்தி வட்டம் அருகே உள்ள கசபா ஊரக வேளாண் கூட்டுறவு சங்கக் கட்டடத்தின் முதல் தளத்தில் இருக்கும் தனது அலுவலகத்திற்குச் சென்றுள்ளார். அவர் படிக்கட்டுகளில் ஏறிக்கொண்டிருந்தபோது, அங்கே மறைந்திருந்த நபர் ஒருவர் திடீரென வெங்கடராமப்பாவின் கழுத்தில் கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
இந்தக் கொடூரத் தாக்குதலில் படுகாயமடைந்த வழக்கறிஞருக்குக் கடுமையான ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள், அவரை உடனடியாக ஒரு ஆட்டோவில் ஏற்றி அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்று முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக அவர் பெங்களூரில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்ததும், துணைக் காவல் கண்காணிப்பாளர் ஜெகநாத் ராய் மற்றும் காவல் ஆய்வாளர் வரலட்சுமி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
வழக்கறிஞர் மீதான இந்தத் தாக்குதலை அடுத்து குற்றவாளியைப் பிடிக்க காவல்துறையினர் தனிப்படைகளை அமைத்து தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அதன் பலனாக, இத்தாக்குதலில் தொடர்புடையதாகக் கருதப்படும் கங்கசந்திரா பகுதியைச் சேர்ந்த துருவா என்ற சந்தேக நபரைக் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் கௌரிபிதானூர் தாலுகா பார் அசோசியேஷன் மற்றும் சிக்கபல்லாப்புரா மாவட்ட வழக்கறிஞர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் நேரில் சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.
