LATEST NEWS
” இன்ஸ்டாகிராம் பழக்கம்…” 17 வயது சிறுமியை 9 பேர்… பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று சீரழித்த சிறுவர்கள்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!
திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் திடீரென காணாமல் போனதைத் தொடர்ந்து, பாலக்கரை காவல் துறையினர் அவரை மீட்டு குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர். அங்கு காப்பக அதிகாரிகளிடம் தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து அந்தப் பெண் விவரித்துள்ளார். சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான 7 சிறுவர்கள் உள்ளிட்ட 9 பேர் கொண்ட கும்பல், தன்னை வெவ்வேறு காலகட்டங்களில் பல இடங்களுக்குக் கடத்திச் சென்று பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்ததாக அதிர்ச்சி வாக்குமூலம் அளித்தார்.
குழந்தைகள் நலக்குழுவினர் அளித்த புகாரின் பேரில், கோட்டை அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். குற்றச்சாட்டுக்கு உள்ளான 7 சிறுவர்கள் மற்றும் 2 வாலிபர்கள் என மொத்தம் 9 பேரையும் போலீசார் அதிரடியாகப் பிடித்துச் சென்று விசாரணை நடத்தியதில், அவர்கள் சிறுமியிடம் அத்துமீறி நடந்துகொண்டது உறுதியானது. இதையடுத்து, அவர்கள் 9 பேர் மீதும் போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து போலீசார் கைது செய்துள்ளனர். இக்கொடூரச் சம்பவத்தில் மேலும் யாருக்கேனும் தொடர்பிருக்கிறதா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், இச்சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
