LATEST NEWS
“பதவி இல்லைன்னா உயிர் போயிடுமா…?” கட்சி தாவும் எம்.எல்.ஏ-க்களைப் பார்த்து வெளுத்து வாங்கிய கிருஷ்ணசாமி…! அதிரும் அரசியல் களம்…!!
தமிழ்நாட்டில் சமீபகாலமாக அரங்கேறி வரும் அரசியல் கட்சித் தாவல்கள் மற்றும் குதிரை பேரங்கள் குறித்துப் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தந்து கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மக்கள் வாக்களித்து வெற்றி பெறச் செய்த சட்டமன்ற உறுப்பினர்கள், தங்களது சுயநலப் பதவிகளுக்காகவும் ஆசை வார்த்தைகளுக்காகவும் வேறு அணிகளுக்கு மாறுவது வாக்களித்த மக்களுக்குச் செய்யும் அசிங்கமான துரோகம் என்று கொந்தளித்தார்.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்புதான் தேர்தல் முடிந்த நிலையில், அதற்குள் மக்கள் பிரதிநிதிகள் கட்சி மாறுவதால் தமிழகத்தில் பல தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வரும் அவலநிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் தமிழக நாகரிக அரசியல் உலக அரங்கில் கேலிக்கூத்தாக மாறியுள்ளதாகவும் அவர் சாடினார்.
தொடர்ந்து பேசிய அவர், கர்நாடக அரசு மேகதாது அணைக் கட்டுமானப் பணியில் பிடிவாதமாக இருப்பதைக் கண்டித்ததுடன், தமிழக முதல்வர் வெறும் சடங்கு தீர்மானங்களை நிறைவேற்றுவதோடு நிறுத்தாமல், அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி பிரதமரை நேரில் சந்தித்து உரிய அழுத்தத்தைத் தர வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மேலும், சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் ஜோசப் விஜய் நடத்திய விழிப்புணர்வு மாரத்தான் நல்ல முயற்சி என்றாலும், தமிழகத்தின் குடும்பங்களைச் சீரழிக்கும் மதுபானக் கடைகளை மூடாமல் போதையை ஒழிக்க முடியாது என்று குறிப்பிட்டார். அரசு 717 டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டதாகக் கூறுவது வெறும் கண் துடைப்பு நாடகம் என்றும், தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்துவதற்கான காலக்கெடுவை அரசு உடனே அறிவிக்க வேண்டும் என்றும் கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார்.
