LATEST NEWS
“டாக்டருக்கு அடையாளம் தெரியணுமே…” கடித்த பாம்போடு ஐசியூ-வுக்குள் நுழைந்த பெண்…. மிரண்டு போன மருத்துவர்கள்…! பரபரப்பு சம்பவம்….!!
ஒடிசா மாநிலம் மால்காங்கிரி மாவட்டம் குரும்பாலி கிராமத்தைச் சேர்ந்த மணிமா நாயக் என்ற 38 வயது பழங்குடியின பெண்மணி, கடந்த புதன்கிழமை நள்ளிரவு தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது காலில் ஏதோ கடிப்பதை உணர்ந்து திடுக்கிட்டு எழுந்துள்ளார். அங்கு ஒரு கொடிய நச்சுப்பாம்பு நெளிவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், பொதுமக்களைப் போலப் பயந்து நடுங்காமல் மிகுந்த மன தைரியத்துடன் செயல்பட்டுள்ளார்.
தனக்குச் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்குப் பாம்பின் இனம் சரியாகத் தெரிய வேண்டும் என்பதற்காக, பாத்திரங்களுக்குள் ஒளிந்திருந்த அந்தப் பாம்பை லாவகமாகப் பிடித்து, வீட்டில் இருந்த ஒரு பிளாஸ்டிக் பிஸ்கட் டப்பாவிற்குள் உயிருடன் அடைத்து மூடினார். அதன்பின்னரே தனது உறவினர்களை எழுப்பி, அந்தப் பாம்பு டப்பாவுடன் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு விரைந்துள்ளார்.
மருத்துவமனைக்குச் சென்ற மணிமா, தனக்குப் பாம்பு கடித்துவிட்டதாகக் கூறி அந்தப் பிளாஸ்டிக் டப்பாவை மருத்துவர்களிடம் காட்டியபோது அங்கிருந்த மருத்துவப் பணியாளர்கள் அனைவரும் ஒருகணம் உறைந்து போயினர். எனினும், டப்பாவிற்குள் இருந்த பாம்பின் இனத்தை மருத்துவர்கள் உடனடியாக அடையாளம் கண்டு, அதற்குரிய சரியான விஷமுறிவு மருந்தைச் செலுத்திச் சிகிச்சையைத் தொடங்கியதால் மணிமா தற்போது ஆபத்தான கட்டத்தைத் தாண்டி தீவிர கண்காணிப்பில் உள்ளார்.
ஆபத்தான சூழலிலும் சமயோசிதமாகச் செயல்பட்ட மணிமாவின் தைரியத்தை நெட்டிசன்கள் பாராட்டி வரும் நிலையில், பாம்பு கடித்தால் அதை மீண்டும் பிடிக்க முயல்வது உயிருக்கே ஆபத்தாக முடியும் என்பதால், பாதுகாப்பான தூரத்திலிருந்து மொபைலில் ஒரு புகைப்படம் மட்டும் எடுத்துக்கொண்டு உடனடியாக மருத்துவமனைக்கு வருவதே புத்திசாலித்தனம் என்று வனவிலங்கு ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர்.
