CINEMA
“சினிமா பத்தி அவருக்கு என்ன தெரியும்?” – புதிய அமைச்சரை வெளுத்து வாங்கிய விஷால்…! கோலிவுட்டில் வெடித்த புதிய சர்ச்சை…!
தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தலைமையில் புதிய அமைச்சரவை கடந்த மே 15ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இதில் சட்டமன்ற உறுப்பினர் ராஜ் மோகனுக்கு பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, மற்றும் தகவல் மற்றும் செய்தி மக்கள் தொடர்புத்துறை உள்ளிட்ட இலாக்காக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்தத் தகவல் தொழில்நுட்பத் துறையின் கீழ் சினிமா தொழில்நுட்பம் மற்றும் சினிமாடோகிராப் சட்ட அமைச்சராகவும் அவர் செயல்பட உள்ளார். இந்நிலையில், சினிமா துறையில் போதிய அனுபவம் இல்லாத ஒருவரை இந்தத் துறைக்கு அமைச்சராக நியமித்திருப்பது வருத்தமளிப்பதாக நடிகர் சங்கப் பொதுச் செயலாளர் விஷால் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக விஷால் தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், முதலமைச்சர் விஜய் தனது தவெக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சரவையைப் பிரித்துக் கொடுத்ததைப் பார்ப்பதில் மகிழ்ச்சி என்றாலும், ராஜ் மோகனை சினிமா தொழில்நுட்ப அமைச்சராக நியமித்திருப்பது ஏமாற்றமளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். தற்போதைய சூழலில் சினிமா தயாரிப்பாளர்களும் நிறுவனங்களும் கடும் பொருளாதார நெருக்கடியில் ரத்தம் சிந்தி பிழைப்பு நடத்தி வருவதாகக் கூறியுள்ள அவர், சினிமா உலகைப் பற்றி முழுமையாகத் தெரிந்த முதலமைச்சர் விஜய்யே இந்தத் துறைக்கு அமைச்சராக இருக்க வேண்டும் என்றும், அப்போதுதான் தங்களின் குறைகளையும் கோரிக்கைகளையும் நேரடியாக அவரிடம் கொண்டு சேர்க்க முடியும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், திரையுலகின் நல்வாழ்விற்காக முதலமைச்சர் விஜய்யிடம் விஷால் மூன்று முக்கிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளார். ரசிகர்களைக் சுரண்டும் கூடுதல் கட்டணங்களைத் தவிர்த்து, அரசு மூலமாகவே டிக்கெட் விற்கும் ‘அரசாங்க டிக்கெட் விண்டோ’ முறையைக் கொண்டு வர வேண்டும், ஜிஎஸ்டி வரி விதிப்புக்கு அப்பாற்பட்டு விதிக்கப்படும் ‘உள்ளாட்சி வரியை’ ரத்து செய்ய வேண்டும், மற்றும் நலிவடைந்த நிலையில் இருக்கும் சிறு பட்ஜெட் படங்களுக்கான மானியத் தொகையை கணிசமாக உயர்த்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை அவர் பட்டியலிட்டுள்ளார்.
இறுதியாக, இந்தக் கோரிக்கைகளை கடந்த ஒன்பது வருடங்களாகவே தாங்கள் மனுவாக அளித்து வருவதாகவும் விஷால் ஆதங்கப்பட்டுள்ளார். புதிய அமைச்சர் ராஜ் மோகனைத் தான் குறைத்து மதிப்பிடவில்லை என்றும், திரையுலகில் 30 ஆண்டுகால அடிமட்ட அனுபவத்தைக் கொண்ட முதலமைச்சர் விஜய் நினைத்தால் மட்டுமே இந்த இண்டஸ்ட்ரிக்கு ஒரு விடிவுகாலம் பிறக்கும் என்பதால் இதைத் தனது தனிப்பட்ட கருத்தாகப் பதிவிடுவதாகவும் அவர் கூறியுள்ளார். நடிகர் விஷாலின் இந்த எக்ஸ் பதிவு தற்போது சமூக ஊடகங்களிலும், அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களிலும் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
