CINEMA
11 ஆண்டுக்கால திருமண பந்தம் முறிந்தது ஏன்…!எங்களுக்குள் வெறுப்பு இல்லை…!”என் மகள்தான் என் பாசிட்டிவ் எனர்ஜி…!””அவர் மீது எனக்கு இப்போதும் மரியாதை இருக்கு!” – நெட்டிசன்களை நெகிழ வைத்த சைந்தவி…!
தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வருபவர் ஜி.வி.பிரகாஷ் குமார். வசந்தபாலன் இயக்கத்தில் வெளியான ‘வெயில்’ படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான இவர், பின்னர் அஜித், ரஜினி எனப் பல டாப் ஸ்டார்களின் படங்களுக்கு இசையமைத்து முத்திரை பதித்தார். ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன போன்ற படங்களில் தனித்துவமான இசையைக் கொடுத்த போதிலும், சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ மற்றும் தனுஷின் ‘வாத்தி’ ஆகிய திரைப்படங்களுக்காகத் தேசிய விருதுகளை வென்று ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் கொண்டாட வைத்தார். தற்போது செல்வராகவன் இயக்கத்தில் ‘மென்டல் மனதில்’ உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் இவருடைய திரைப்பயணம் வெற்றிகரமாகச் சென்றாலும், இவருடைய தனிப்பட்ட வாழ்க்கை சில வருடங்களுக்கு முன்பு ஒரு பெரும் புயலைச் சந்தித்தது.
ஜி.வி.பிரகாஷும், பிரபல பின்னணிப் பாடகி சைந்தவியும் பள்ளியில் படிக்கும் காலத்திலிருந்தே காதலித்து வந்தவர்கள். கோலிவுட்டின் ‘ஃபேவரைட் ரியல் ஜோடி’யாக வலம் வந்த இவர்களது நீண்ட கால காதல், இருவீட்டாரின் சம்மதத்துடன் முறைப்படி திருமணத்தில் முடிந்தது. இவர்களுக்கு ‘அன்வி’ என்ற ஒரு மகளும் இருக்கிறார். எவ்விதப் புகாருமின்றி சுமூகமாகப் போய்க்கொண்டிருந்த இவர்களது 11 ஆண்டுகால திருமண பந்தம், கடந்த 2024ஆம் ஆண்டு பரஸ்பர விவாகரத்து மூலம் அதிகாரப்பூர்வமாக முறிவடைந்தது. இவர்களது பிரிவு திரையுலகினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய நிலையில், தங்களின் விவாகரத்து குறித்து சைந்தவி சமீபத்திய பேட்டி ஒன்றில் மிகவும் பக்குவமாகப் பேசியுள்ளார்.
அந்தப் பேட்டியில் பேசிய சைந்தவி, “யாருக்குமே திருமணம் செய்துவிட்டு விவாகரத்து பெற வேண்டும் என்ற ஆசை இருக்காது. இறுதிவரை சேர்ந்து வாழ வேண்டும் என்றுதான் எல்லோரும் நினைப்பார்கள். ஆனால், சில காரணங்களால் எங்களுக்குள் அது ஒர்க் அவுட் ஆகவில்லை. இதனால் மேற்கொண்டு எதற்காக வாழ்க்கையை ரிஸ்க் எடுக்க வேண்டும் என்று நினைத்துதான், இரண்டு பேரும் சுமுகமாகப் பேசிப் பிரிந்தோம்” என்று ஓபனாகக் கூறியுள்ளார். மேலும், “பிரிந்தாலும் நல்ல நண்பர்களாகத் தொடர வேண்டும் என முடிவு செய்தோம். அதன்படியே இன்னமும் நாங்கள் பேசிக்கொண்டுதான் இருக்கிறோம்; நல்ல நண்பர்களாகவே பழகி வருகிறோம்” எனத் தற்போதைய நிலவரத்தைப் பகிர்ந்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், “ஒருவர் மீது ஒருவருக்கு இப்போதும் பரஸ்பர மரியாதை இருக்கிறது. எங்களுக்குள் எந்தவித வெறுப்போ, தேவையில்லாத கசப்பான பேச்சுக்களோ கிடையாது. இப்போது எனக்கு என்னுடைய மகள்தான் மிகப்பெரிய பாசிட்டிவ் எனர்ஜி” என்று நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டுள்ளார். பொதுவாக விவாகரத்திற்குப் பின் தம்பதிகள் ஒருவரையொருவர் சாடிக்கொள்ளும் சூழலில், பிரிந்த பின்பும் ஜிவி பிரகாஷ் மீது சைந்தவி காட்டியுள்ள இந்த முதிர்ச்சியான அணுகுமுறையும், மரியாதையும் சமூக வலைத்தளங்களில் பலராலும் பாராட்டப்பட்டு, இந்த நேர்காணல் வைரலாகி வருகிறது.
