LATEST NEWS
“என் புள்ளைக்கே பதவியில்லை” செங்கோட்டையன் ரூட்டில் ஓபிஎஸ்..? தேனி டூ பனையூர்… ரகசியமாக காய் நகர்த்தும் மகன் ரவீந்திரநாத்… அதிர்ச்சியில் அறிவாலயம்..!!
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்து மூன்று மாதங்கள் கடந்த பிறகும், அவருக்கு இதுவரை எவ்வித முக்கிய கட்சிப் பொறுப்போ அல்லது நிர்வாகப் பொறுப்போ வழங்கப்படாததால் அவர் கடுமையான அதிருப்தியில் இருப்பதாக தேனி மற்றும் அண்ணா அறிவாலய வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. மேலும், தனது மகன் ஓ.பி.ரவீந்திரநாத் குமாருக்கும் கட்சியில் முக்கியப் பதவி வழங்க வேண்டும் என்று அவர் திமுக தலைமையிடம் விடுத்த கோரிக்கையும் தற்போதைக்கு நிராகரிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளத் திட்டமிட்டுள்ள விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் , ஓபிஎஸ் மற்றும் அவரது மகனைத் தங்கள் பக்கம் இழுப்பதற்கான தீவிரப் பேச்சுவார்த்தைகளில் இறங்கியுள்ளது.
தென் மாவட்டங்களில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு இருக்கும் அசைக்க முடியாத அரசியல் செல்வாக்கு, மூத்த அரசியல் அனுபவம் மற்றும் அவரது தனிப்பட்ட ஆதரவாளர் வட்டத்தைக் கணக்கில் கொண்டு தவெகவின் பனையூர் வட்டாரம் இந்த ஸ்கெட்ச்சை போட்டுள்ளது. ஒருவேளை ஓபிஎஸ் தவெகவில் இணைந்தால், வரவிருக்கும் இடைத்தேர்தலில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு, அதில் வெற்றி பெற்ற பிறகு செங்கோட்டையனைப் போல் அமைச்சர் பதவியும், கட்சியின் முக்கிய ஒருங்கிணைப்பாளர் பதவியும் வழங்கப்படும் என தவெக தரப்பில் தூது விடப்பட்டுள்ளது. தவெகவின் இந்த அதிரடி ஆஃபர் காரணமாக, ஓபிஎஸ்ஸை விடவும் அவரது மகன் ஓ.பி.ரவீந்திரநாத் குமார் விஜய் கட்சியில் இணைய அதிக ஆர்வம் காட்டி வருவதாகத் தெரிகிறது.
2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தமிழக அரசியல் களம் முற்றிலுமாக மாறியுள்ள நிலையில், மாவட்ட அளவில் செல்வாக்கு மிக்க இரண்டாம் கட்டத் தலைவர்களை உருவாக்க தவெக தீவிரமாக முயன்று வருகிறது. ஏற்கனவே அதிமுகவிலிருந்து விலகிய ஆறு சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் போன்றோர் தவெகவில் இணைந்து நல்ல முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளதால், மற்ற தலைவர்களுக்கும் தவெகவின் மீது புதிய நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. தற்போது ஓபிஎஸ் திமுகவிலேயே நீடித்து தனக்கான வாய்ப்புக்காகக் காத்திருப்பாரா அல்லது மகனுடன் சேர்ந்து விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தை நோக்கி நகர்வாரா என்ற எதிர்பார்ப்பு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
