LATEST NEWS
மாமன், மச்சான், மாப்பிள்ளை உறவை உங்க வீட்டோட வச்சிக்கோங்க… பொதுமேடையில் இப்படியா.? சி.விஜயபாஸ்கரை கிழித்து தொங்கவிட்ட கிருஷ்ணசாமி..!!
தமிழக வெற்றிக் கழகத்தின் அமைச்சர் பர்வேஸை, “என் அன்பு மாப்பிள்ளை” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் குறிப்பிட்டதற்கு புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கே.கிருஷ்ணசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். விஜயபாஸ்கரின் இந்த பேச்சு அளவுக்கு மீறிய மற்றும் அரசியல் மரபுக்கு மீறிய ஒரு புகழுரையாகவே பார்க்கப்படுகிறது என்று அவர் தனது அறிக்கையில் சாடியுள்ளார்.
அதிமுகவிலிருந்து விலகி அண்மையில் தவெகவில் ஐக்கியமாகியுள்ள விராலிமலை எம்.எல்.ஏ சி.விஜயபாஸ்கர், புதுக்கோட்டை தவெக அலுவலகத் திறப்பு விழா பத்திரிகையாளர் சந்திப்பில் இந்த வார்த்தைகளைப் பயன்படுத்தியிருந்தார். தனக்குப் பெரும் இடையூறாக இருக்கக்கூடியவர் எனக் கருதப்பட்ட தவெக அமைச்சர் பர்வேஸை புகழ்ந்து பாடினால் மட்டுமே தான் கட்சிக்குள் நுழைய முடியும் என்ற கட்டாயத்தில் விஜயபாஸ்கர் இப்படி ஒரு படி மேலே சென்று சொந்தம் கொண்டாடியுள்ளதாக கிருஷ்ணசாமி விமர்சித்துள்ளார்.
மேலும், மாமன், மச்சான், மாப்பிள்ளை போன்ற உறவுமுறைகள் அனைத்தும் குடும்பத்தோடு நான்கு சுவற்றுக்குள் வைத்து கொண்டாடப்பட வேண்டியவை என்று சுட்டிக்காட்டியுள்ள கிருஷ்ணசாமி, அவற்றை அரசியல் பொதுவெளியில் வெளிப்படுத்துவது நாகரிகமாகாது என்றும், இத்தகைய செயல்கள் சாதிய மற்றும் மத ரீதியான குறியீடுகளாகவே கருதப்படும் என்றும் தனது அறிக்கையில் விரிவாகக் குறிப்பிட்டுள்ளார்.
