CINEMA
மீண்டும் சிக்கிய மோகன்லால்…! தன்னிடம் 46 கிலோ எடையுள்ள 6 யானை தந்தங்கள், 13 சிலைகள் இருப்பதாக அதிர்ச்சி வாக்குமூலம்..!!!
பிரபல மலையாள நடிகர் மோகன்லால் தன்னிடம் 6 யானைத் தந்தங்கள் மற்றும் 13 தந்தச் சிலைகள் இருப்பதாக கேரள வனத்துறையிடம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார். கேரள வனத்துறை அண்மையில் பொதுமன்னிப்புத் திட்டம் ஒன்றைக் கொண்டு வந்தது. இதன்படி, தனிநபர்கள் தங்களின் வசம் வைத்துள்ள வனவிலங்குப் பொருட்களின் விவரங்களை அரசிடம் தாமாக முன்வந்து அறிவிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, நடிகர் மோகன்லால் இந்த புதிய விவரங்களை வனத்துறைக்கு எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னதாக, கடந்த 2011-ஆம் ஆண்டு மோகன்லாலின் இல்லத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியபோது, அங்கிருந்து சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருந்த யானை தந்தங்கள் மற்றும் சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. அப்போது, அனுமதியின்றி இரண்டு ஜோடி யானைத் தந்தங்களை வைத்திருந்ததாக அவர் மீது அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். ஆரம்பத்தில் நான்கு தந்தங்கள் என்று அறியப்பட்ட நிலையில், தற்போதைய பொதுமன்னிப்புத் திட்டத்தின் கீழ் அவர் கூடுதலாக மேலும் பல விபரங்களை வெளியிட்டுள்ளார்.
தற்போது மோகன்லால் தெரிவித்துள்ள தகவலின்படி, அவரிடம் இருக்கும் தந்தச் சிலைகளில் கிருஷ்ணர், ராமர் மற்றும் திருப்பதி பாலாஜி போன்ற இந்து கடவுள்களின் உருவச்சிலைகள் இருப்பதாக வனத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்தச் சிலைகள் மற்றும் தந்தங்களின் மொத்த எடை சுமார் 46 கிலோகிராம் இருக்கும் என்று அதிகாரிகள் கணித்துள்ளனர். வனவிலங்குப் பொருட்களைச் சட்டவிரோதமாக வைத்திருந்த வழக்கில் ஏற்கனவே அவர் விசாரணையை எதிர்கொண்டு வரும் நிலையில், இந்த புதிய அறிவிப்பு தற்பொழுது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
