LATEST NEWS
“செல்வாக்கே இல்லாத பாஜக பேசலாமா?.. அரசியல் நகைச்சுவை பண்ணாதீங்க”.. பாஜகவின் முகத்திரையைக் கிழித்துத் தொங்கவிட்ட மாணிக்கம் தாகூர்..!!
மேகதாது அணை விவகாரத்தை அரசியல் ஆதாயத்திற்காகப் பயன்படுத்தி, தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையே தேவையற்ற பதற்றத்தை உருவாக்க மத்திய அரசு முயன்று வருவதாகத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி. குற்றம்சாட்டியுள்ளார். மேகதாதுவில் ஒரு செங்கல்லைக்கூட வைக்க அனுமதிக்க மாட்டோம் என்று தான் கூறியதை விமர்சித்த தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு அவர் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு மக்கள் ஆதரவை இழந்து, செல்வாக்கு குறைந்துவிட்ட பா.ஜ.க.வின் தலைவர், காங்கிரஸின் நிலைப்பாட்டை விமர்சிப்பது அரசியல் நகைச்சுவை என்றும் அவர் சாடியுள்ளார்.
கர்நாடகாவில் பா.ஜ.க. ஆட்சிக் காலத்தில் இருந்த முன்னாள் முதல்வர்கள் எடியூரப்பா, பசவராஜ் பொம்மை ஆகியோர் மேகதாது அணையை கட்டியே தீருவோம் என்றும், தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறக்க முடியாது என்றும் எல்லையோரப் போராட்டம் நடத்தியதை மக்கள் இன்னும் மறக்கவில்லை என மாணிக்கம் தாகூர் குறிப்பிட்டுள்ளார். மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உள்ளது. ஆனால், தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் அணை கட்டக்கூடாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகும், அணைக்கான திட்ட அறிக்கை தயாரிக்கக் கர்நாடகாவிற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியிருப்பது அதன் இரட்டை நிலைப்பாட்டைக் காட்டுவதாக விமர்சித்துள்ளார்.
மாநிலப் பிரச்சினைகளைத் தீர்க்கும் அதிகாரம் மத்திய அரசிடமே உள்ளது என்றும், ராகுல் காந்தியோ அல்லது மல்லிகார்ஜுன கார்கேவோ மத்திய ஆட்சியில் இல்லாததால் அவர்களிடம் இந்த அதிகாரம் இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். மேகதாது அணைக்கு எதிராகத் தமிழ்நாடு காங்கிரஸ் உறுதியாக இருக்கும் நிலையில், கர்நாடக பா.ஜ.க. தலைவர்களிடம் இருந்து அணைத் திட்டத்தைக் கைவிடுவதற்கான உறுதியைப் பெற்றுத் தர நயினார் நாகேந்திரனால் முடியுமா என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், த.வெ.க. அரசு மீது ஆதாரமற்ற ஊழல் குற்றச்சாட்டுகளைக் கூறும் பா.ஜ.க., தங்களை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் எச்சரித்துள்ளார்.
