LATEST NEWS
“இனிமேல் அங்க போகக்கூடாது”.. அமைச்சர்களுக்கு செக் வைத்த முதல்வர் விஜய்.. ட்ரோல்களால் எடுத்த அதிரடி முடிவு..!!
தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் தமிழக வெற்றிக் கழக ஆட்சியில், ஒரு சிலரைத் தவிர பெரும்பாலான எம்.எல்.ஏ-க்கள் மற்றும் 95 சதவீத அமைச்சர்கள் புதியவர்களாகவே உள்ளனர். தற்போதுதான் அவர்கள் தங்களது எம்.எல்.ஏ, அமைச்சர் மற்றும் துறை சார்ந்த பணிகளைக் கற்று வரும் சூழலில், தங்களுக்குச் சம்பந்தமில்லாத துறைகளில் அமைச்சர்கள் நடத்தும் ஆய்வுகள் மற்றும் அது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகித் தொடர்ந்து ட்ரோல்களில் சிக்கி வருகின்றன. சமீபத்தில் கூட, தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா அரசுப் பள்ளி ஒன்றிற்குச் சென்று ஆய்வு நடத்தியபோது, அங்கிருந்த குழந்தையிடம் ஆங்கிலத்தில் பேசிய வீடியோ கடும் கண்டனங்களையும் ட்ரோல்களையும் சந்தித்ததுடன், உதயநிதி ஸ்டாலின், சீமான் உள்ளிட்ட தலைவர்களாலும் விமர்சிக்கப்பட்டது. இந்தத் தொடர் சர்ச்சைகள் முதல்வர் விஜய்க்குப் பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளன.
இதனைத் தொடர்ந்து, இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் முதலமைச்சர் விஜய் தனது அமைச்சர்களுக்கு அதிரடியான புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதன்படி, ‘இனிமேல் அந்தந்த துறை சார்ந்த அமைச்சர்கள் மட்டுமே தங்களது சொந்த துறைகளில் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும்; தங்களுக்குச் சம்பந்தமில்லாத வேறு துறைப் பணிகளை ஆய்வு செய்ய எந்தவொரு அமைச்சரும் செல்லக்கூடாது’ என்று அவர் கறாராகக் கட்டளையிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அமைச்சர்களின் செயல்பாடுகளால் அரசுக்கு ஏற்படும் விமர்சனங்களைத் தவிர்க்கவே முதல்வர் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
