LATEST NEWS
வரலாற்றில் இப்படி நடந்ததே இல்லை… “அரிதினும் அரிதான வழக்கு’ ஒரே நாளில் 38 பேருக்கு தூக்குதண்டனை… வெறும் 70 நிமிட இடைவெளியில் நடந்த பகீர் சம்பவம்..!!
கடந்த 2008-ஆம் ஆண்டு ஜூலை 26-ஆம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் சங்கிலித் தொடராக 21 இடங்களில் நடத்தப்பட்ட பயங்கரவாதக் குண்டுவெடிப்பு வழக்கில், 38 குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை மற்றும் 11 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை குஜராத் உயர் நீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது. வெறும் 70 நிமிட இடைவெளியில் நிகழ்த்தப்பட்ட இந்த கோரத் தாக்குதலில் 58 பேர் உயிரிழந்தனர் மற்றும் 200-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்களுக்குச் சிகிச்சை அளித்த மருத்துவமனைகளையும் குறிவைத்துத் தாக்குதல் நடத்தப்பட்டதால் இந்தச் சம்பவம் அப்போது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் கடந்த 2022-ஆம் ஆண்டில், இதனை ‘அரிதினும் அரிதான வழக்கு’ எனக் குறிப்பிட்டு 38 பேருக்குத் தூக்கு தண்டனையும், 11 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்துக் குற்றவாளிகள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களை, நீதிபதிகள் ஏ.ஒய். கோக்ஜே மற்றும் சமீர் தவே அடங்கிய அமர்வு முழுமையாகத் தள்ளுபடி செய்து சிறப்பு நீதிமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்கத் தண்டனைகளை தற்போது உறுதி செய்துள்ளது.
கடந்த 2002-ஆம் ஆண்டு குஜராத் கலவரத்திற்குப் பழிவாங்கும் நோக்கில், இந்தியன் முஜாஹிதீன் என்ற பயங்கரவாத அமைப்பால் இத்தாக்குதல் நடத்தப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. இதற்கான சதித்திட்டம் 2007 டிசம்பரில் கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் தடை செய்யப்பட்ட ‘சிமி’ அமைப்பின் ரகசிய முகாமில் தீட்டப்பட்டது அம்பலமானது. மேலும், வழக்கு விசாரணையின் போது குற்றவாளிகள் 24 பேர் சிறைக்குள் 213 அடி நீளத்திற்குச் சுரங்கம் தோண்டி தப்பிக்க முயன்ற அதிர்ச்சித் திட்டமும் உரிய நேரத்தில் கண்டறியப்பட்டு முறியடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
