LATEST NEWS
வாட்ஸ்அப், டெலிகிராமில் ரகசிய குரூப்… இந்தியாவைச் சீர்குலைக்க சதி..! அலர்ட் ஆன NIA… 4 பேர் அதிரடி கைது..!!
தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா ஆகிய இரு மாநிலங்களில் பரவலாக அதிரடி சோதனை நடத்தினர். குறிப்பாக ஆந்திர மாநிலத்தின் விஜயவாடா, பஞ்சா சென்டர், நைஜாங் கேட், கொல்ல பாலம் கட்டு ஆகிய முக்கிய இடங்களிலும், தெலுங்கானா மாநிலம் மலக்பேட்டையில் உள்ள சைதாபேகம் பகுதியிலும் இந்தச் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. வெளிநாடுகளில் உள்ள பயங்கரவாத அமைப்புகளின் உத்தரவின் பேரில், இந்தியாவைச் சீர்குலைக்க சதித் திட்டம் தீட்டப்படுவதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தச் சோதனையின் போது முகமது ரஹ்மத்துல்லா, செரீப், மிர்ஷா சோகைல் பெய்க் மற்றும் முகமது டேனிஷ் ஆகிய 4 நபர்களின் வீடுகளில் இருந்து ஏராளமான சிம்கார்டுகள், செல்போன்கள், டி-ஷர்ட்டுகள், கைக்குட்டைகள் மற்றும் பல்வேறு டிஜிட்டல் சாதனங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், இவர்களது நண்பர்களின் வீடுகளிலும் சோதனைகள் நடத்தப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட டிஜிட்டல் சாதனங்கள் அனைத்தும் தகுந்த தடயவியல் பகுப்பாய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட இந்த 4 நபர்களும் ஒரு ரகசியக் குழுவை உருவாக்கி, சர்வதேச அளவில் தடை செய்யப்பட்ட அல்கொய்தா மற்றும் ஐ.எஸ்.ஐ.எஸ் போன்ற பயங்கரவாத அமைப்புகளுடன் நெருங்கிய தொடர்பில் இருந்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தியாவின் அமைதியைக் கெடுக்கும் நோக்கில் சதித் செயல்களில் ஈடுபட முயன்ற குற்றத்திற்காக அதிகாரிகள் இந்த 4 பேரையும் அதிரடியாகக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
