LATEST NEWS
அரசியல் பழிவாங்கலா? முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு எதிரான லுக் அவுட் நோட்டீஸிற்கு இடைக்காலத் தடை!..நீதிமன்றம் உத்தரவு..!
கடந்த 2022-ம் ஆண்டில் திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் சாலைப்பணிகள் மேற்கொள்ளாமலேயே ஒப்பந்ததாரர்களுக்கு நிதி விடுவிக்கப்பட்டதாக அறப்போர் இயக்கம் அளித்த புகாரின் பேரில், முன்னாள் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு மீது லஞ்ச ஒழிப்புத்துறை ஊழல் வழக்குப் பதிவு செய்தது. இந்த விவகாரம் தொடர்பாக கடந்த ஜூன் 30-ம் தேதி நேரில் ஆஜராகுமாறு அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால், அவர் மருத்துவ சிகிச்சைக்காக அதற்கு முன்னதாகவே சிங்கப்பூர் சென்றிருந்ததால் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதனால், லஞ்ச ஒழிப்புத்துறையினர் அவருக்கு எதிராக ‘லுக் அவுட்’ நோட்டீஸ் பிறப்பித்து நடவடிக்கை எடுத்தனர்.
இந்த லுக் அவுட் நோட்டீஸ் மற்றும் தன் மீதான வழக்கை ரத்து செய்ய வலியுறுத்தி எ.வ.வேலு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு ஆஜரான வேலுவின் வழக்கறிஞர், ஆட்சி மாற்றத்தின் காரணமாகவே அரசியல் பழிவாங்கும் நோக்கில் இந்த வழக்கு பதியப்பட்டுள்ளதாகவும், 76 வயதான அவர் திட்டமிட்ட மருத்துவ சிகிச்சை முடிந்து ஜூலை 12-ம் தேதி தாயகம் திரும்புவார் எனவும் வாதாடினார். வாதங்களை ஏற்றுக்கொண்ட நீதிபதி, லுக் அவுட் நோட்டீஸுக்கு இடைக்காலத் தடை விதித்ததுடன், ஜூலை 15-ம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி முன்பு அவர் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும், ஜூலை 28 வரை அவர் மீது எவ்வித கடுமையான நடவடிக்கைகளும் எடுக்கக் கூடாது என லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அறிவுறுத்திய நீதிபதி, வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தார்.
