“ஏம்பா… கல்யாணத்தை நிறுத்த வேற வழியே தெரியலையா..? மாப்பிள்ளை வீட்டு செவுத்தையே.. ‘காதல் காவியம்’ ஆக்கிய விசித்திர காதலன்..!!” – cinefeeds
Connect with us

LATEST NEWS

“ஏம்பா… கல்யாணத்தை நிறுத்த வேற வழியே தெரியலையா..? மாப்பிள்ளை வீட்டு செவுத்தையே.. ‘காதல் காவியம்’ ஆக்கிய விசித்திர காதலன்..!!”

Published

on

தெலுங்கானா மாநிலம் சித்திபெட் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு இளைஞரும் யுவதியும் கடந்த 7 ஆண்டுகளாக தீவிரமாகக் காதலித்து வந்துள்ளனர். இருவரும் ஒருவரையொருவர் பிரியாமல் வாழ சபதம் எடுத்திருந்த நிலையில், பெண்ணின் குடும்பத்தினர் இவர்களது காதலுக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், காதலியின் விருப்பத்திற்கு மாறாக, ராஜன்னா சிரிசில்லா மாவட்டத்திலுள்ள தங்கல்லபள்ளி கிராமத்தைச் சேர்ந்த வேறொரு இளைஞருடன் அவசர அவசரமாகத் திருமண நிச்சயதார்த்தம் செய்து, திருமண முகூர்த்தத்தையும் குறித்துள்ளனர். வரதட்சணை ஆசையாலேயே தனது காதலி இந்தத் திருமணத்திற்குள் தள்ளப்படுவதாக அந்த இளைஞர் குற்றம் சாட்டியுள்ளார்.

எப்படியாவது தனது காதலைக் காப்பாற்றவும், இந்தத் திருமணத்தை நிறுத்தவும் நினைத்த காதலன் ஒரு விசித்திரமான திட்டத்தைத் தீட்டினான். அவனும் அவனது காதலியும் நெருக்கமாக இருக்கும் பழைய புகைப்படங்களைச் சேர்த்து பெரிய அளவிலான போஸ்டர்களை அச்சடித்தான். அந்தப் போஸ்டர்களில் தங்களின் புகைப்படங்கள் மட்டுமின்றி, காதலிக்கு நிச்சயம் செய்யப்பட்ட மணமகனின் பெயர், அவரது தந்தையின் பெயர், மொபைல் எண் மற்றும் வீட்டு முகவரி ஆகிய அனைத்தையும் தெளிவாக அச்சிட்டான். பின்னர், நள்ளிரவில் காரில் மணமகனின் கிராமமான தங்கல்லபள்ளிக்குச் சென்று, கிராமத்தின் முக்கியச் சுவர்கள் அனைத்திலும் அந்தப் போஸ்டர்களை ஃபெவிகால் கொண்டு ஒட்டிவிட்டுத் தப்பியோடினான்.

Advertisement

மறுநாள் காலையில் எழுந்த கிராம மக்கள், சுவர்களில் ஒட்டப்பட்டிருந்த காதல் போஸ்டர்களைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இந்த விஷயம் அந்த மாவட்டம் முழுவதும் காட்டுத்தீ போல பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கிராமத்திலுள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது, அந்த இளைஞர் நள்ளிரவில் காரில் வந்து போஸ்டர்களை ஒட்டும் காட்சிகள் பதிவாகியிருந்தது உறுதி செய்யப்பட்டது. இச்சம்பவம் குறித்து உள்ளூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது வரை அதிகாரப்பூர்வமாக வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்றாலும், மணமகன் வீட்டாரோ அல்லது பெண்ணின் குடும்பத்தினரோ அவதூறு மற்றும் மிரட்டல் விடுத்ததாகப் புகார் அளித்தால், அந்த இளைஞர் மீது கடுமையான சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in