LATEST NEWS
பாஸ் உங்களோட அழுக்கு மூட்டைகள் அவிழும்.. அப்போ நாடே கைகொட்டிச் சிரிக்கப் போகுது.. முன்னாள் அமைச்சர் சிவசங்கருக்கு தவெக ஐடி விங் கொடுத்த அதிரடி பதிலடி..!
திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கரின் விமர்சனங்களுக்குத் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தகவல் தொழில்நுட்ப அணி தனது எக்ஸ் (X) பக்கத்தில் மிகக் காரசாரமான பதிலடியைக் கொடுத்துள்ளது. முதல்வர் ஜோசப் விஜய்யின் கரூர்ப் பேச்சால் சிவசங்கர் மனப்பதற்றம் அடைந்து, யோகிபாபு ரசிகர் மன்றத் தலைவர் போல் மனநிலை தவறி உளறுகிறார் என்று தவெக சாடியுள்ளது. கரூரில் தற்போதைய தவெக ஆட்சியில் காவல் துறை பாதுகாப்பு எவ்வளவு தெளிவாக இருந்தது என்பது மக்களுக்குத் தெரியும் என்றும், அன்று திமுக ஆட்சியில் காவல் துறை எவ்வாறு கையாளப்பட்டது என்பதைத்தான் தங்கள் தலைவர் சுட்டிக்காட்டினார் என்றும் தவெக விளக்கியுள்ளது.
திமுகவை “ஊழலின் ஊற்றுக்கண்” என்று விமர்சித்துள்ள தவெக, ஊழல் கடலில் தினமும் நீந்தும் திமுகவினருக்கு செந்தில் பாலாஜியைப் புனிதராக ஏற்றுப் பாதபூஜை நடத்தக் கூச்சமே இருக்காது என்று சாடியுள்ளது. ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர்களைக் கட்சியில் சேர்த்துக்கொண்டு, வாயையே வாஷிங் மெஷினாக்கித் துவைப்பதால் திமுகவின் அழுக்கு மூட்டைகள் நீங்கிவிடாது என்றும் தவெக ஐடி விங் பதிவிட்டுள்ளது. மேலும், அறிஞர் அண்ணா சொன்ன எண்ணெய்க் கதையைத் தன் சொந்தச் சிந்தனை போல சிவசங்கர் பேசுவது பிறர் அறிவைத் திருடும் திமுகவின் குணம் என்றும் குற்றம் சாட்டியுள்ளது.
திமுகவின் ஒவ்வொரு ஊழலும் இனி வரும் நாட்களில் வெளியில் வரும்போது அவர்களின் அழுக்கு மூட்டைகள் அவிழும் என்றும், அப்போது நாடே கைகொட்டிச் சிரிக்கப் போகிறது என்றும் தவெக எச்சரித்துள்ளது. தானாகவே வந்து சிக்கலில் மாட்டிக்கொள்ளும் திமுகவின் உண்மை முகம் விரைவில் வெளிப்படும் என்றும் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளது.
