LATEST NEWS
பள்ளிக்குள் தவெக நிகழ்ச்சி நேரலை ஒளிபரப்பு… பள்ளி தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்… அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி…!!
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் கரூர் அரசியல் நிகழ்ச்சியை மாணவர்களுக்கு நேரலை செய்து திரையிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக எழுந்த புகாரை அடுத்து, பள்ளியின் தலைமை ஆசிரியை மல்லிகாவை தற்காலிகப் பணிநீக்கம் (Suspension) செய்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்துப் பேசிய பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன், அரசுப் பள்ளிகளில் அதிகாரப்பூர்வ அரசு நிகழ்ச்சிகளைத் தவிர எந்தவொரு அரசியல் கட்சியின் நிகழ்ச்சிகளையும் மாணவர்களுக்குக் காட்டக் கூடாது என ஏற்கனவே தெளிவான உத்தரவு உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். துறை விதிமுறைகளை மீறி, தன்னிச்சையாக முடிவெடுத்து தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) நிகழ்ச்சியை நேரலை செய்ததாலேயே தலைமை ஆசிரியை மீது இந்த உடனடி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் விளக்கியுள்ளார்.
மேலும் “கல்வி நிலையங்களில் அரசியலுக்கு இடமில்லை” என்பதில் இந்த அரசு உறுதியாக உள்ளதாக அமைச்சர் ராஜ்மோகன் எச்சரித்துள்ளார். பள்ளிக்கூடம் என்பது கல்வி கற்பதற்கான இடமே தவிர அரசியலுக்கானது அல்ல என்பதை திட்டவட்டமாகக் கூறிய அவர், விதிமுறைகளை மீறி செயல்படுபவர்கள் யாராக இருந்தாலும் தயக்கமின்றி கடுமையான நடவடிக்கைகள் தொடரும் என அனைத்து மாவட்டக் கல்வி அதிகாரிகளுக்கும் தலைமையாசிரியர்களுக்கும் மீண்டும் அறிவுறுத்தியுள்ளார்.
