LATEST NEWS
பள்ளிகளில் அரசியல் கட்சிகளுக்கு அனுமதி இல்லை… தேவையின்றி யாரும் நுழையக்கூடாது.. அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி உத்தரவு..!!
தமிழக அரசுப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் முதலமைச்சரின் பிறந்தநாள் விழாக்கள் கொண்டாடப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் கடுமையான புதிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார். கல்விக்கூடங்கள் என்பவை காட்சிக்கூடங்களோ அல்லது அரசியல் பேசும் மேடைகளோ அல்ல, அவை அடுத்த தலைமுறையை உருவாக்கும் அறிவுப்பண்ணைகள் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இனிவரும் காலங்களில் பள்ளி வளாகங்களில் தேவையின்றி வெளிநபர்கள் யாரோ, அரசியல் கட்சியினரோ அல்லது தனியார் அமைப்பினரோ நேரடியாக நுழைந்து மாணவர்களைச் சந்திக்க முற்றிலும் அனுமதி இல்லை என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
அரசு சார்பில் அதிகாரப்பூர்வமாக நடத்தப்படும் நிகழ்வுகளைத் தவிர்த்து, பள்ளிகளில் எவ்விதமான பிறந்தநாள் விழாக்களோ அல்லது அரசு சாராத தனியார் நிகழ்ச்சிகளோ நடத்தப்படக் கூடாது என்றும் அமைச்சர் ராஜ்மோகன் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார். வகுப்பறைகளில் மாணவர்கள் கற்கும் ஒவ்வொரு நொடியும் நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கும் பொன்னான நேரம் என்பதால், ஆசிரியர்களின் கற்பித்தல் பணிக்கும் மாணவர்களின் கவனத்திற்கும் எந்தவித இடையூறும் ஏற்படக் கூடாது என்று அவர் கூறியுள்ளார். இந்த புதிய கட்டுப்பாடுகளை மீறி எவரேனும் செயல்பட்டால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், இதற்கான விரிவான நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
