LATEST NEWS
உனக்கு ஹிந்தி தெரியாதா.? மேடையிலேயே மாணவனின் காதை திருகிய EX அமைச்சர்… பாய்ந்தது வழக்கு…!!
கேரள முன்னாள் அமைச்சர் கே.டி.ஜலீல் மீது பள்ளி மாணவனைப் பொதுவெளியில் அவமானப்படுத்தியதாகக் கூறி கேரள குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது. பாலக்காடு மாவட்டம் மன்னார்க்காட்டில் பத்தாம் வகுப்பில் ‘ஏ-பிளஸ்’ தரம் பெற்ற மாணவர்களுக்கான பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற சிபிஎம் நிர்வாகியும் முன்னாள் அமைச்சருமான கே.டி.ஜலீல், இந்தியில் அதிக மதிப்பெண்கள் பெற்ற ஒரு மாணவரை மேடைக்கு அழைத்து, முகவரியை இந்தியில் எழுதக் கூறியுள்ளார். அம்மாணவன் முகவரியைத் தவறாக எழுதியதால், கோபமடைந்த அவர் மேடையிலேயே மாணவனின் காதைப் பிடித்து திருகியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்தச் சம்பவத்தின் காட்சிகள் ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து, குழந்தைகள் உரிமைகள் ஆணையத் தலைவர் கே.வி. மனோஜ் குமார் இந்தத் தன்னிச்சையான நடவடிக்கையை எடுத்துள்ளார். பொது மேடையில் மாணவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் இதுபோன்ற செயல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை எனப் பெண் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிந்து கிருஷ்ணா தெரிவித்துள்ளார். எனினும், தான் ஒரு முன்னாள் ஆசிரியர் என்ற முறையில் மாணவர்களை ஊக்குவிக்கவும் திருத்தவும் நகைச்சுவையாகவும் அன்பாகவும் செய்யும் ஒரு வழக்கமான செயல்முறைதான் இது என்றும், மாணவரையோ அல்லது பெற்றோரையோ புண்படுத்தும் நோக்கம் தமக்கு இல்லை என்றும் கே.டி.ஜலீல் விளக்கம் அளித்துள்ளார்
